ஊட்டி;ஊட்டி, எச்.ஏ.டி.பி., அரங்கில் ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்பு திட்டம் சார்பில் துறை சார்ந்தவர்களுக்கான திறன் வளர்ப்பு பயிற்சி முகாம் நடந்தது.மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு திட்ட அலுவலர் பிரபு பேசுகையில்,''நீலகிரியில், கடந்தாண்டில், 51 போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 'கோவிட்' சமயத்தில் இதுவரை, 65 போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. பொதுவாக, பாலியல் ரீதியான துன்புறுத்தல், குடியிருப்பு அருகே வசிப்பவர்கள், உறவினர்கள், ஆசிரியர்கள், நண்பர்களால் தான் குழந்தைகளுக்கு ஏற்படுவதாக தெரிய வந்துள்ளது.பெற்றோர் வேலை அல்லது வெளியிடங்களுக்கு செல்லும் போது எக்காரணத்தை கொண்டும் யாரையும் நம்பி குழந்தைகளை விட்டு செல்லாதீர்கள். பெற்றோர் குழந்தைகளுக்கு பாதுகாப்பு அரணாக இருக்க வேண்டும். இவ்வாறு, பிரபு பேசினார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள், கிராம ஊராட்சி தலைவர்கள், ஆசிரியர்கள், வருவாய் துறை ஊழியர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.