குன்னுார்:குன்னுார் வெலிங்டன் சதுக்கத்தில், 'அசாயி' போர் நினைவு தினத்தையொட்டி மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது.கடந்த, 1803 ம் ஆண்டு, நீலகிரி மாவட்டம் குன்னுார் வெலிங்டன் மெட்ராஸ் ரெஜிமென்ட் பயிற்சி மையத்தின் தரைப்படையினர் பங்கேற்றதால், அசாயி போர், வெற்றி பெற்றது.இதன் நினைவு தின நிகழ்ச்சியையொட்டி, நேற்று வெலிங்டன் போர் நினைவிடத்தில், மெட்ராஸ் ரெஜிமென்ட் சென்டர் கமாண்டன்ட் பிரிகேடியர் ராஜேஸ்வர் சிங், மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.தொடர்ந்து, நடந்த ராணுவ வீரர்களின் கூட்டத்தில் பிரிகேடியர் ராஜேஸ்வர் சிங் பேசுகையில்,''அப்போதைய மராத்தியருக்கும், ஆங்கிலேயர்களுக்கும் நடந்த 'அசாயி' போரில், மெட்ராஸ் ரெஜிமென்ட் ராணுவ வீரர்களின் பங்களிப்பு மற்றும் போர் திறனால் மிகப்பெரிய வெற்றி கிடைத்தது. இதன் காரணமாக சென்டருக்கு யானை சின்னம் கிடைத்தது. ராணுவத்தின் சீருடையில் இது அங்கம் வகிக்கிறது. வீரர்கள் தைரியம் மற்றும் வீரத்துடன் இந்த போரில் போரிட்டனர். இது தற்போதைய மற்றும் வருங்கால ராணுவ வீரர்களுக்கு வழிகாட்டியாக உள்ளது,''என்றார்.