குன்னுார்:குன்னுாரில், சிறு தேயிலை விவசாயம் மற்றும் உற்பத்தியை ஊக்குவிக்க, விவசாயிகளுக்கு சிறப்பு பகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 1.21 கோடி ரூபாய் மானியம் வழங்கப்பட்டது.இந்திய தேயிலை வாரியம் மற்றும் மாநில அரசின் சிறப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் மானியம் வழங்கும் நிகழ்ச்சி, குன்னுார் உபாசி அரங்கில் நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு, தலைமை வகித்த, வனத்துறை ராமச்சந்திரன் பேசுகையில்,''சிறு தேயிலை விவசாயிகள் எண்ணிக்கையை அதிகரித்து ஊக்கப்படுத்தவும், சிறப்பு தேயிலை உற்பத்தியை சந்தைப்படுத்தவும் முன்னோடி திட்டம் துவங்கப்பட்டுள்ளது.''இந்நிலையில், கவாத்து இயந்திரம், பேட்டரி மூலம் கொழுந்து அறுவடை இயந்திரத்திற்கு, 200 சிறுவிவசாயிகளுக்கும், சிறப்பு தேயிலை துாள், ஆர்கானிக் தேயிலை துாள் விற்பனை மையம்; வேலையற்ற சிறு தேயிலை விவசாய இளைஞர்கள் புதிய தேயிலை அபிவிருத்தி தொழில் துவங்குவது; மினி தேயிலை தொழிற்சாலை அமைப்பது ஆகியவற்றிற்கு, 75 பேருக்கு, மாநில அரசின் சிறப்பு பகுதி மேம்பாட்டு நிதி உதவியில், 1.21 கோடி மானியம் வழங்கப்பட்டுள்ளது. மானியத்தை முறையாக பெற்று தரமான தேயிலை துாள் தயாரிக்க வேண்டும்,'' என்றார்.தேயிலை வாரிய செயல் இயக்குனர் பாலாஜி, உறுப்பினர் குமரன், துணை இயக்குனர் ஹரிபிரகாஷ் பேசினர். கோத்தகிரி பகுதியை சேர்ந்த விவசாயிகள் பங்கேற்றனர். நிகழ்ச்சியில், 275 பேருக்கு மானியம் மற்றும் பயனாளிகளுக்கு தடை இல்லா சான்றுகள் வழங்கப்பட்டன. உதவி இயக்குனர் ரமேஷ் நன்றி கூறினார்.