வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் சிக்கியுள்ள, ஓய்வு பெற்ற ஐ.எப்.எஸ்., அதிகாரியும், மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவருமான வெங்கடாசலத்தின் சொகுசு பங்களா, அலுவலகம் என, ஐந்து இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். இதில், 13.50 லட்சம் ரூபாய் ரொக்கம், 6.5 கிலோ தங்கம் மற்றும் சந்தரன மர பொருட்களை கைப்பற்றி உள்ளனர்.சேலம் மாவட்டம், ஆத்துார் அம்மம்பாளையத்தை சேர்ந்தவர் வெங்கடாசலம், 63. இவர், 1983ல், ஐ.எப்.எஸ்., அதிகாரியாக தேர்ச்சி பெற்று வனத்துறையில் சென்னை உட்பட பல இடங்களில் பணிபுரிந்தார். சுற்றுச்சூழல் இயக்குனராக பணிபுரிந்து, 2018ல் ஓய்வு பெற்றார்.முந்தைய அ.தி.மு.க., ஆட்சியில், 2019ல், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவராக நியமிக்கப்பட்டார். இவர், அதிகார துஷ்பிரயோகம் செய்து வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது.இதற்கிடையில், முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, விஜயபாஸ்கர், வீரமணி ஆகியோரின் வீடு மற்றும் அலுவலகங்களில், லஞ்ச ஒழிப்பு போலீசார் சமீபத்தில் சோதனை நடத்தினர்.அவர்களிடம் பறிமுதல் செய்யப்பட்ட ஆவணம் ஒன்றில், சிபாரிசு காரணமாக, மாசு கட்டுப்பாட்டு வாரியத்தில் ஆட்கள் தேர்வு மற்றும் டெண்டர் விவகாரம் குறித்த பதிவுகள் சிக்கின. இதையடுத்து, வெங்கடாசலம் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார், சொத்து குவிப்பு வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர்.இந்நிலையில், சென்னை கிண்டியில் உள்ள மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைமை அலுவலகம்; வேளச்சேரியில் உள்ள வெங்கடாசலத்தின் சொகுசு பங்களா; சேலம் மாவட்டம் ஆத்துார், அம்மம்பாளையத்தில் உள்ள பூர்வீக வீடு உள்பட ஐந்து இடங்களில், லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று சோதனை நடத்தினர்.சோதனையில் 2 கோடி ரூபாய் மதிப்புள்ள 6.5 கிலோ தங்கம்; 13.50 லட்சம் ரூபாய் ரொக்கம் சிக்கியது. வெங்கடாசலத்தின் வீட்டில், 10 கிலோ சந்தன மரத்தால் செய்யப்பட்ட பொருட்கள் மற்றும் சந்தன மரத்துண்டுகள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்ததும் தெரியவந்தது. அவற்றையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.இவர் வனத்துறையில் உயர் அதிகாரியாக பணியாற்றி இருந்ததால், சட்ட விரோதமாக சந்தன மர கடத்தலில் ஈடுபட்டாரா; சந்தன மர பொருட்கள் மற்றும் சந்தன மரத்துண்டுகள் எப்படி கிடைத்தது என்பது குறித்து, வனத்துறை அதிகாரிகளின் விசாரணைக்கு லஞ்ச ஒழிப்பு போலீசார் பரிந்துரை செய்துள்ளனர்.சேலம் அம்மன்பாளையத்தில், வெங்கடாசலத்திற்கு, 40 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலத்தை வாங்கிய விதம் பற்றியும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.ஏற்கனவே, சுற்றுச்சூழல் துறை கண்காணிப்பாளராக இருந்த பாண்டியன் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி போது, கட்டுக்கட்டாக பணம், நகைகள் சிக்கியது குறிப்பிடத்தக்கது - நமது நிருபர் குழு -.