திருப்பத்துார்:''தி.மு.க., செய்யும் தில்லுமுல்லு வேலைகளை முறியடித்து ஊரக உள்ளாட்சி தேர்தலில், அ.தி.மு.க., வெற்றி பெற வேண்டும்,'' என, எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி பேசினார்.தமிழகத்தில் வேலுார் உள்ளிட்ட ஒன்பது மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் அக்., 6 மற்றும் 9ம் தேதிகளில் நடக்கிறது.அ.தி.மு.க., நிர்வாகிகளை, அக்கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவருமான பழனிசாமி சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார்.திருப்பத்துார் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நேற்று நடந்தது. இதில், பழனிசாமி பேசியதாவது:ஊரக உள்ளாட்சி தேர்தலில், தி.மு.க., செய்யும் தில்லுமுல்லு வேலைகளை முறியடித்து அ.தி.மு.க.,வினர் வெற்றி பெற வேண்டும்.'குடும்பத் தலைவியருக்கு மாதம் 1,000 ரூபாய், முதியோர் உதவித்தொகை 1,000 ரூபாயில் இருந்து, 1,500 ரூபாயாக உயர்த்துவது, கல்வி கடன், மகளிர் சுய உதவிக் குழுக்கள் கடன், விவசாய கடன் தள்ளுபடி, காஸ் சிலிண்டருக்கு 100 ரூபாய் மானியம்' என தி.மு.க., தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதிகள் என்னவாயிற்று?ஓட்டுக்களை பெறுவதற்காக, ஸ்டாலின் பச்சை பொய் சொல்லி ஆட்சிக்கு வந்தார். ஆனால், தேர்தல் அறிக்கையை தி.மு.க., நடைமுறைப் படுத்தவில்லை. தேர்தல் நேரத்தில் வாக்குறுதிகள் அளிப்பர், பின் நிறைவேற்ற மாட்டர். மக்களிடம் ஓட்டுக்கள் வாங்கி ஏமாற்றி வருகின்றனர்.அ.தி.மு.க.,வினர் மீது வழக்கு போடுவது, சோதனை நடத்துவது என்று செய்து வருகின்றனர். எவ்வளவு பழி வாங்கினாலும் அஞ்சப் போவதில்லை. மடியில் கனமில்லை, வழியில் பயமில்லை.முதல்வராக இருந்தபோது, நான் நினைத்திருந்தால் எத்தனையோ வழக்குகளை, தி.மு.க., வினர் மீது போட்டிருக்கலாம். ஆனால், ஒரு நிமிடம் கூட வீணாக்காமல் மக்களுக்கு நன்மைகள் செய்தேன்.இவ்வாறு அவர் பேசினார்.ஊரக உள்ளாட்சி தேர்தல் குறித்து அ.தி.மு.க., நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம், ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டையில் நேற்று மாலை நடந்தது. இதில், பழனிசாமி பேசியதாவது:சட்டம் - ஒழுங்கு சீரழிவுஅ.தி.மு.க., ஆட்சியில் சட்டம் - ஒழுங்கு சரியாக இருந்தது. இப்போது தி.மு.க., ஆட்சியில் தினமும் கொலை, கொள்ளை, கற்பழிப்பு, வழிப்பறி, செயின் பறிப்பு நடக்கிறது. வாணியம்பாடியில் நடந்து சென்ற முஸ்லிம் சகோதரர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நடந்துள்ளது. தி.மு.க., ஆட்சியில் சட்டம்- ஒழுங்கு முற்றிலும் செத்து விட்டது.இப்போது குட்கா லோடு, லோடாக கடத்தப்படுகிறது. இதனால், சமூக விரோதிகள் உருவாகிக் கொண்டிருக்கின்றனர்.இவ்வாறு, அவர் பேசினார்.