கோவை:அழுது கொண்டே இருந்த குழந்தையின் வாயில், பிஸ்கட் பேப்பரை பாட்டி திணித்ததால் மூச்சு திணறி இறந்தது.கோவை, ஆர்.எஸ்.புரம் பகுதியைச் சேர்ந்தவர் நித்யானந்தம்; மனைவி நந்தினி, 24. இத்தம்பதியருக்கு இரண்டு மகன்கள். இந்நிலையில், சில மாதங்களுக்கு முன் கணவருடன் ஏற்பட்ட பிரச்னையால், 1 வயது மகன் துர்கேஷ் உடன், ஆர்.எஸ்.புரத்தில் உள்ள தாய் நாகலட்சுமி வீட்டுக்கு சென்று நந்தினி தங்கினார்.நந்தினி வேலைக்கு செல்லும் நிலையில், குழந்தையை நாகலட்சுமி கவனித்து வந்தார். நேற்று முன்தினம், வேலைக்கு சென்று இரவு வீடு திரும்பினார். அப்போது துர்கேஷ், அசைவின்றி தொட்டிலில் படுத்திருந்தான். அதிர்ச்சியடைந்த அவர், தனியார் மருத்துவமனைக்கு துாக்கி சென்றார். பரிசோதித்த டாக்டர்கள், இறந்து விட்டதாக தெரிவித்தனர். ஆர்.எஸ்.புரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. குழந்தையின் உடல் முழுதும் சிறு, சிறு காயங்கள் இருந்ததால் சந்தேகமடைந்த போலீசார், நந்தினி, நாகலட்சுமியிடம் விசாரித்தனர். இதில், குழந்தையை அடித்த பாட்டி, அழுகையை நிறுத்த பிஸ்கட் பேப்பரை வாயில் திணித்ததால், குழந்தை பலியானது தெரிந்தது.ஆர்.எஸ்.புரம் போலீசார் கூறுகையில், 'குழந்தை, கீழே கிடந்த பொருட்களை எடுத்து வாயில் போட்டுள்ளது. கோபமடைந்த பாட்டி, குழந்தையை சராமாரியாக அடித்தார். குழந்தை அழுது கொண்டே இருந்துள்ளது.'அழுகையை நிறுத்த பிஸ்கட் பேப்பரை வாயில் திணித்து, தொட்டிலில் படுக்க வைத்துவிட்டு, அவரது வேலைகளை பார்க்க சென்றுவிட்டார். மூச்சுவிட முடியாமல் குழந்தை இறந்துள்ளது. இரவு மகள் வந்து பார்த்தபோது தான், இந்த விஷயம் தெரிந்துள்ளது' என்றார். போலீசார், நாகலட்சுமியை கைது செய்தனர்.