கூடலுார்:கூடலுார் அருகே, கூண்டு வைத்து புலியை பிடிக்க, 20 இடங்களில் தானியங்கி கேமராக்கள் வைத்து கண்காணிக்கப்படுகிறது.நீலகிரி மாவட்டம், கூடலுார் மண்வயல் பகுதியில், புலி, யானைகள் நடமாட்ட பிரச்னைக்கு தீர்வு காண வலியுறுத்தி, நேற்று முன்தினம், கிராம மக்கள், கூடலுார்- மைசூரு தேசிய நெடுஞ்சாலையில், ஐந்து மணி நேரம் சாலை மறியலில் ஈடுபட்டனர். நடவடிக்கை எடுப்பதாக வன அதிகாரிகள் உறுதியளித்ததால், போராட்டத்தை கைவிட்டனர்.வனத்துறையினர், புலியை பிடிப்பதற்காக கூண்டு வைத்து கண்காணித்து வருகின்றனர். மேலும், முதுமலையை ஒட்டி, 20 இடங்களில், 40 தானியங்கி கேமராக்கள் வைத்து கண்காணித்து வருகின்றனர்.குணில்வயல் பகுதிகளில், வனச்சரகர் கணேசன் தலைமையில் வன ஊழியர்கள், 'ட்ரோன்' கேமரா வாயிலாக, யானை நடமாட்டத்தை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டனர்.வனத்துறையினர் கூறுகையில், 'புலியை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. யானை் நடமாட்டத்தை ட்ரோன் வாயிலாக கண்காணித்து வருவதுடன், 'கும்கி' உதவியுடன் விரட்டவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது' என்றனர்.