நீட் தேர்வுக்காக தி.மு.க., குறை கூறுவதை ஏற்க முடியாதுங் பா.ஜ., மாநில துணைத் தலைவர் துரைசாமி பேட்டி | கள்ளக்குறிச்சி செய்திகள் | Dinamalar
நீட் தேர்வுக்காக தி.மு.க., குறை கூறுவதை ஏற்க முடியாதுங் பா.ஜ., மாநில துணைத் தலைவர் துரைசாமி பேட்டி
Advertisement
 

பதிவு செய்த நாள்

24 செப்
2021
04:09

கள்ளக்குறிச்சி-'நீட் தேர்வுக்காக, பா.ஜ., மீது தி.மு.க., மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் குறை கூறுவது ஏற்புடையதல்ல' என பா.ஜ., மாநில துணைத் தலைவர் துரைசாமி கூறினார்.



இதுகுறித்து கள்ளக்குறிச்சியில் நேற்று அவர், நிருபர்களிடம் கூறியதாவது:தமிழகத்தில், தனியார் மருத்துவக் கல்லுாரிகள் அதிகமாக உள்ளன. தனியார் கல்லுாரி உரிமையாளர்கள் மருத்துவ சீட்டை சில, பல கோடிகளுக்கு விற்று பலனடைய வேண்டும் என்ற எண்ணம் தி.மு.க., அரசுக்கு இருக்கிறது.அதனால் தான் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்ற உள்நோக்கத்துடன் செயல்படுகின்றனர். இதனை மாணவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். மற்ற மாநிலங்களில் நீட் தேர்வு பின்பற்றப்படும் நிலையில், தமிழகத்தில் மட்டும் விலக்கு கேட்பது நியாயம் கிடையாது. பிளஸ் 2 முடித்து நீட் தேர்வுக்கு பயிற்சி பெறுவோர் மற்றும் படிக்கும் மாணவர்கள் தேர்வுக்கு அஞ்சியோ, தேர்வு முடிவை பற்றியோ எண்ணி தற்கொலை செய்து கொள்ளும் எண்ணத்தைக் கைவிட வேண்டும். மருத்துவம் மட்டுமே படிப்பு கிடையாது. அதற்கு ஈடான வகையில் உள்ள படிப்புகள் மூலமும் உயர்ந்த நிலைக்குச் செல்ல முடியும். தி.மு.க., மற்றும் அதன் கூட்டணி கட்சிகள், நீட் தேர்வுக்காக, மத்திய பா.ஜ., அரசை குறை கூறுவது நியாயம் கிடையாது. மாணவர்கள் பாதிக்கப்படுவதாகக் கருதினால், அட்வகேட் ஜெனரலிடம் ஆலோசனைப் பெற்று தி.மு.க., அரசு சுப்ரீம் கோர்ட்டை நாடலாம். அதனை விடுத்து மாறுபட்ட கருத்துகளைக் கூறுவது ஏற்புடையதல்ல. தேர்தலின்போது, ஓட்டுக்காக நீட் தேர்வை ரத்து செய்கிறோம் என நாங்கள் கூறவில்லை.சுப்ரீம் கோர்ட் வழங்கிய தீர்ப்பினை அமல்படுத்த வேண்டியது மத்திய, மாநில அரசின் கடமை. தீர்ப்புக்கு எதிராக, ஓய்வு பெற்ற நீதிபதி ராஜன் தலைமையில் தி.மு.க., அரசு கமிட்டி அமைத்ததே தவறு. கல்வியை அரசியல் ஆக்குவது நல்லது கிடையாது. ஏ.கே.ராஜன் கமிட்டி அறிக்கையை கல்வியாளர்கள் பலரும் ஏற்றுக் கொள்ளவில்லை. எனவே, மாணவர்கள் சிந்தித்து செயல்பட வேண்டும். தி.மு.க., அரசு நீட் தேர்வுக்கு காட்டும் முனைப்பினை, சகாயம் ஐ.ஏ.எஸ்., கமிட்டி அறிக்கையிலும் அக்கறை செலுத்த வேண்டும்.இவ்வாறு துரைசாமி கூறினார்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X