விழுப்புரம்-விழுப்புரம் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட 6,097 பதவிகளுக்கு 24 ஆயிரம் பேர் வேட்பு மனு தாக்கல் செய்து பிரசாரத்தை துவக்கியுள்ளனர்.
தமிழகத்தில் விழுப்புரம் உள்ளிட்ட 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல் வரும் அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் நடக்கிறது. விழுப்புரம் மாவட்டத்தில் 13 ஒன்றியங்களில், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் 28, ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் 293, கிராம ஊராட்சித் தலைவர் 688, கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் 5,088 என மொத்தம் 6,097 பதவிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது.
இதற்காக, கடந்த 15ம் தேதி துவங்கிய வேட்புமனு தாக்கல் 22ம் தேதியுடன் முடிவடைந்தது. இதில், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினருக்கு 241 பேரும், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினருக்கு 2,091 பேரும், கிராம ஊராட்சி தலைவருக்கு 4,138 பேரும், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினருக்கு 17 ஆயிரத்து 530 பேர் என மொத்தம் 24 ஆயிரம் பேர் மனு தாக்கல் செய்துள்ளனர்.இதையடுத்து, வேட்பு மனுக்கள் பரிசீலனை செஞ்சி, கண்டமங்கலம், முகையூர், ஒலக்கூர், திருவெண்ணெய்நல்லுார், வானுார், விக்கிரவாண்டி, காணை, கோலியனுார், மயிலம், மரக்காணம், மேல்மலையனுார், வல்லம் ஆகிய பி.டி.ஓ., அலுவலகங்களில் நேற்று நடந்தது.வேட்பு மனுக்கள் தாக்கல் செய்த நிலையில், மாவட்டத்தில் உள்ள அனைத்து உள்ளாட்சி பதவிகளுக்கு போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களின் ஆதரவாளர்களுடன் தீவிர பிரசாரத்தை துவங்கியுள்ளனர்.
கிராம ஊராட்சித் தலைவர் வேட்பாளர்கள் தங்கள் பகுதியில் உள்ள வீடுகளுக்குச் சென்றும், மாவட்ட மற்றும் ஒன்றிய கவுன்சிலர் வேட்பாளர்கள் தங்கள் வார்டு எல்லைக்குட்பட்ட கிராமங்களுக்குச் சென்றும் ஆதரவு திரட்டி வருகின்றனர்.அரசியல் கட்சியினர் மற்றும் சுயேச்சைகள் தங்களுக்கு ஓட்டளிக்க வேண்டும் எனக்கேட்டு வீதி, வீதியாக சுற்றுவதால் கிராமங்களில் உள்ளாட்சித் தேர்தல் சூடுபிடித்துள்ளது.