கடலுார்-நத்தவெளி ரோட்டில் இருந்து அப்புறப்படுத்தியவர்களுக்கு நிரந்தர இடம் வழங்குவது தொடர்பாக பேச்சுவார்த்தை இழுபறியில் முடிந்தது.கடலுார் பாதிரிக்குப்பம் ஊராட்சியில் சாலை விரிவாக்கப் பணிக்காக, நத்தவெளி ரோட்டில் 74 வீடுகள் அகற்றப்பட்டு, திருமாணிக்குழியில் மாற்று இடம் ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால், அவர்கள் அங்கு செல்ல மறுத்ததால், கெடிலம் ஆற்றங்கரையொட்டி நத்தம் புறம்போக்கு இடத்தில் தற்காலிகமாக இடம் வழங்கப்பட்டது. அங்கு அவர்கள் வசிக்கும் நிலையில், அப்பகுதியில் நகராட்சி சார்பில் குப்பை கொட்டியதாக தெரிகிறது. இதையறிந்த அப்பகுதியில் குடியிருப்போர், தங்களுக்கு நிரந்தர மாற்றும் இடம் கேட்டும், தற்போது குடியிருக்கும் இடத்தில் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரியும் பாதிரிக்குப்பம் ஊராட்சி அலுவலகத்தை கடந்த 15ம் தேதி முற்றுகையிட்டனர். தகவலறிந்த கடலுார் தாசில்தார் பலராமன், ஊராட்சி தலைவர் சரவணன் ஆகியோர், அரிசிபெரியாங்குப்பத்தில் மாற்று இடம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என, தெரிவித்தனர்.அது தொடர்பாக நேற்று பாதிரிகுப்பம் தனியார் மண்டபத்தில் தாசில்தார் பலராமன் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஊராட்சி தலைவர் சரவணன், பி.டி.ஓ., சக்தி, மற்றும் அசோக் பாபு உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஆனால் பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எடுக்கப்படாமல் இழுபறியில் முடிந்தது.