அரும்பாக்கம்-அரைகுறையாக விடப்பட்ட மழை நீர் வடிகால் பணியால், ஓராண்டுக்கு மேல் அரும்பாக்கம் மக்கள் சிரமப்படுகின்றனர்.அண்ணா நகர் மண்டலம், 100வது வார்டில், அரும்பாக்கம், உத்தாளாட்சி அம்மன் கோவில் தெரு உள்ளது. இந்த பகுதிகளில், 500க்கும் மேற்பட்டோர் குடும்பத்தினருடன் வசித்து வருகின்றனர்.இந்த தெரு முனை இணைப்பு சாலையில், ஓராண்டுக்கு முன், மழைநீர் வடிகால் பணி நடந்தது. மீண்டும் இணைப்பு சாலை சீரமைக்கப்படாததால், அப்பகுதி மக்கள் அவதிப்படுகின்றனர்.இதுகுறித்து, பகுதி மக்கள் கூறியதாவது:உத்தாளாட்சி அம்மன் தெருவில் இருந்து, பூந்தமல்லி நெடுஞ்சாலையை இணைக்கும் பகுதியில், மழைநீர் வடிகால் பணி நடந்தது. அதற்காக இணைப்பு சாலை துண்டிக்கப்பட்டது. மீண்டும் சாலை சீரமைக்கப்படாததால், அவ்வழியாக வாகனங்கள் செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.மாற்று வழியாக, 1 கி.மீ., துாரம் உள்ள பாஞ்சாலி அம்மன் கோவில் வழியாக செல்கிறோம். அதேபோல், அரைகுறையாக விடப்பட்ட பணிகளை, பருவ மழைக்கு முன் நிறைவு செய்ய வேண்டும்.இதுதொடர்பாக, பலமுறை புகார் அளித்தும், எந்த நடவடிக்கையும் இல்லை. மாநகராட்சியினர் மழை நீர் வடிக்கால்களை துார் வாரும் பணியில் ஈடுபடுகின்றனர். அத்துடன், அரைகுறையாக விடப்பட்ட பணிகளை செய்ய அறிவுறுத்த வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.