சென்னையில், புதிய வழித்தடங்களில் பஸ்கள் இயக்குவதாக கூறும் எம்.டி.சி., நிர்வாகம், பழைய வழித்தடங்களில் பஸ்கள் இயக்கத்தை நிறுத்தி வருவது, பயணியர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு, 33 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் கடன் உள்ளது. இதனால், செலவைக் குறைக்கும்படி, அதிகாரிகளுக்கு அரசு உத்தரவிட்டது.இதன்படி, வசூல் குறைவான வழித்தடங்களில் பஸ்கள் நிறுத்தப்பட்டன. கொரோனா பரவலுக்குப் பின், பஸ்களில் பயணியர் கூட்டம் குறைந்தது. இந்நிலையில், தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், நிறுத்தப்பட்ட வழித்தடங்களில் மீண்டும் பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.அதன்படி, சென்னை, நங்கநல்லுார் -- பிராட்வே வழித்தடத்தில் இயங்கிய, தடம் எண்: 52கே; நங்கநல்லுார்- - கோயம்பேடு வழித்தடத்தில் இயங்கிய, தடம் எண்: 70 என்: கீழ்கட்டளை - -தியாகராயநகர் வழித்தடத்தில் இயக்கப்பட்ட, தடம் எண்: எம்.18 சி, ஆகிய பஸ்கள் மீண்டும் இயக்கப்பட்டன.அத்துடன், புதிய வழித்தடங்களான மவுண்ட் மெட்ரோ- - தி.நகர் வழித்தடத்தில் தடம் எண்: 576; கவுல்பஜார் - இந்திராநகர்- - பல்லாவரம் வழித்தடத்தில், தடம் எண்: எஸ் 40, ஆகிய பஸ்களை போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் கடந்த மாதம் துவக்கி வைத்தார்.அதே போல், அய்யப்பன்தாங்கல் பஸ் நிலையத்தில் இருந்து நிறுத்தப்பட்ட, அய்யப்பன்தாங்கல் - -தாம்பரம் வழித்தடத்தில் இயக்கப்பட்ட, தடம் எண்: 166; தண்டலம் - -பிராட்வே வழித்தடத்தில் இயக்கப்பட்ட தடம் எண்: 88 சி.குன்றத்துார் - -பிராட்வே வழித்தடத்தில் இயக்கப்பட்ட தடம் எண்: 188 சி; குன்றத்துார் - -திருப்போரூர் வழித்தடத்தில் இயக்கப்பட்ட தடம் எண்: 566, ஆகிய பஸ்கள் மீண்டும் இயக்கப்பட்டன.மேலும், கோவூர் இ.பி.-பல்லாவரம் வழித்தடத்தில், தடம் எண்: எஸ் 165, போரூர் - -மணிமேடு வழித்தடத்தில், தடம் எண்: எஸ்166, குன்றத்துார்- - தி.நகர் வழித்தடத்தில், தடம் எண்: 188 ஏ உள்ளிட்ட மினி பஸ்களும் இயக்கப்பட்டன. இதனால், பயணியரும், ஓட்டுனர், நடத்துனர்களும் மகிழ்ச்சியடைந்தனர். இந்த மகிழ்ச்சி நீடிக்கவில்லை. காரணம், ஏற்கனவே இயக்கப்பட்டு வந்த பல்வேறு வழித்தட பஸ்களை சத்தமில்லாமல் நிறுத்தி வருகின்றனர்.இது குறித்து, சென்னை மாநகர போக்குவரத்து கழக நடத்துனர்கள் கூறியதாவது:திருவொற்றியூர் பணிமனையில் நிறுத்தப்பட்ட, திருவொற்றியூர் -- திருவான்மியூர் வழித்தடத்தில், தடம் எண்: 109, திருவொற்றியூர் -- பிராட்வே வழித்தடத்தில், தடம் எண்: சி 56சி, ஆகிய பஸ்கள் மீண்டும் இயக்கப்பட்டன. தற்போது, திருவொற்றியூர் - எழும்பூர் செல்லும் தடம் எண்: 28ஏ, திருவொற்றியூர் - திருவேற்காடு செல்லும் தடம் எண்: 159, 56சி ஆகிய பஸ்கள் நிறுத்தப்பட்டுள்ளன.அதே போல், அய்யப்பன்தாங்கல் பஸ் நிலையத்தில், தடம் எண்: எஸ் 166, எஸ் 165 வழித்தட பஸ்களுக்கு பதிலாக, தடம் எண்: 12எம், 11ஜி, 37ஜி, எம்88, 26 ஆகிய வழித்தட பஸ்கள் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால், பயணியர் குழப்பமும், அவதியும் அடைந்துள்ளனர்.இது போல், தமிழகம் முழுதும் ஏற்கனவே இயக்கப்பட்ட எண்ணிக்கையில் தான், இப்போதும் பஸ்கள் இயக்கப்படுகின்றன.ஆனால், கூடுதல் பஸ்களை இயக்குவதாக, அரசு அவ்வப்போது அறிவிக்கிறது. இதனால், பஸ் கிடைக்காமல் திரும்பி செல்லும் ஓட்டுனர், நடத்துனர்களின் எண்ணிக்கை அப்படியே தான் உள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்