சென்னை-குழந்தைகள் மரணத்தை தடுக்க, சென்னை மாநகராட்சியில் கூடுதல் ஆம்புலன்ஸ் சேவையை வழங்க நடவடிக்கை எடுக்கும்படி, தமிழக அரசுக்கு, மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.சென்னை, பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த மணிமேகலை, சஞ்சீவராயன்பேட்டையில் உள்ள, நகர்ப்புற ஆரம்ப சுகாதார மையத்தில், பிரசவத்திற்காக சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு, 2014 டிச., 12ம் தேதி, அறுவை சிகிச்சை வாயிலாக ஆண் குழந்தை பிறந்தது.குழந்தைக்கு மூச்சு திணறல் ஏற்பட்டதால், ஆட்டோ வாயிலாக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்ட குழந்தை, 2015 ஜன., 5ம் தேதி இறந்து விட்டது.இதனால், உரிய மருத்துவ வசதிகளை ஏற்படுத்தி தராத டாக்டர் தனலட்சுமிக்கு எதிராக, மணிமேகலை, தண்டையார்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதையடுத்து, டாக்டர் அஜாக்கிரதையால் தன் குழந்தை இறந்து விட்டதாக கூறி, டாக்டர் தனலட்சுமிக்கு எதிராகவும், புகார் மீது வழக்கு பதிவு செய்யாத இன்ஸ்பெக்டர் பாபு ராஜேந்திர போஸ் மீதும், மாநில மனித உரிமை ஆணையத்தில், மணிமேகலை மனு தாக்கல் செய்தார்.மனுவை விசாரித்த நீதிபதி துரை ஜெயச்சந்திரன் பிறப்பித்த உத்தரவு:குழந்தையை பறிகொடுத்த பெண், மன ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளார். இந்த விவகாரத்தில் டாக்டர் தனலட்சுமி மனித உரிமையை மீறியுள்ளதால், பாதிக்கப்பட்ட மணிமேகலைக்கு, 3 லட்சம் ரூபாயை இழப்பீடாக, தமிழக அரசு வழங்க வேண்டும். மேலும், குழந்தைகள் மரணத்தை தடுக்க, சென்னை மாநகராட்சியில் கூடுதலாக ஆம்புலன்ஸ் சேவைகளை வழங்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.