சென்னை-சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் எதிரே, பூந்தமல்லி நெடுஞ்சாலையில், விதி மீறும் பயணியர், பொதுமக்களால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால், சாலை போக்குவரத்து முடங்குவது மட்டுமின்றி, சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு சென்று, வெளிமாநில ரயில்களை பிடிக்க வேண்டிய பயணியரும் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். சென்னை எம்.ஜி.ஆர்., சென்ட்ரல் மற்றும் மூர்மார்க்கெட் ரயில் நிலையம் வழியாக, தினமும், மூன்று லட்சம் பேர் பயணிக்கின்றனர்.வெளியிடங்களில் இருந்து, ரயிலில் சென்ட்ரல் வரும் பயணியர், சேத்துப்பட்டு, அரும்பாக்கம், கோயம்பேடிற்கு செல்வதற்கும், எதிரில் உள்ள, ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு செல்வதற்கும், பூந்தமல்லி சாலையில் உள்ள, சுரங்கப்பாதை வழியாக செல்ல வேண்டும். ராஜிவ்காந்தி மருத்துவமனை பகுதியில் இருந்து சென்ட்ரல் பக்கம் வருபவர்கள், இந்த சுரங்கப்பாதை வழியாக சென்டரலுக்கும், சென்ட்ரல் பஸ் நிறுத்தத்தில் இருந்து பாரிமுனை, வண்ணாரப்பேட்டை, திருவொற்றியூர் ஏரியாவுக்கு பஸ்களில் செல்ல வேண்டியுள்ளது.ரயிலில் சென்ட்ரல் வரும் பயணியர், ரயிலுக்கு செல்லும் பயணியர் என, சென்ட்ரல் ரயில் நிலையம் எதிரே பூந்தமல்லி சாலையில் எந்நேரமும் கூட்டம் அதிகம் உள்ளது.பூந்தமல்லி சாலையை கடப்பதற்கு பயணியரும், பொதுமக்களும் போக்குவரத்து போலீசார் மற்றும் சிக்னல்களை கண்டுகொள்ளாமல், ஆபத்தான நிலையில் அவசர, அவசரமாக சாலையை கடக்க முயல்வதால், விபத்து அபாயத்துடன், கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது. இப்பகுதியில், சாலை யை கடக்க சுரங்கப்பாதையை பயன்படுத்த வேண்டும் என, ஒலிபெருக்கி வாயிலாகவும், போலீசாராலும் தெரிவிக்கப்பட்ட போதும், பயணியர் அலட்சியமாக சாலையை அவசர அவசரமாக கடந்து செல்கின்றனர்.காலை, மாலை வேளைகளில், ஒரே நேரத்தில் நுாற்றுக்கணக்கானோர் சாலையை கடக்க முயல்வதால், அப்பகுதியில் சாலை போக்குவரத்து ஸ்தம்பிக்கிறது. நேர விரயம்!சுரங்கப்பாதையை பயன்படுத்தாமல், சாலையை கடக்கும் நபர்களால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால், வெ ளிமாநில ரயில்களை பிடிக்க, நிறைய லக்கேஜ்களுடன் கார் மற்றும் பிற வாகனங்களில் ரயில் நிலையங்களுக்கு வருவோர், குறித்த நேரத்தில் நிலையத்தை அடைய முடிவதில்லை. அதே போல், இப்பகுதியில் செல்லும் இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்களும் கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி, நேர விரயம் ஏற்படுகிறது. - எக்பிரஸ் ரயில் பயணியர்புதிய சுரங்கப்பாதை பணிபூந்தமல்லி சாலையின் தெற்கு பகுதியில், ராஜீவ்காந்தி மருத்துவமனை ஏரியாவில் இருந்து, எம்.ஜி.ஆர்., சென்ட்ரல் மெட்ரோ, சென்ட்ரல் எக்ஸ்பிரஸ், மூர்மார்க்கெட் புறநகர் மின்சார ரயில் நிலையங்களுக்கு செல்வதற்கு ஏதுவாக, மெட்ரோ ரயில் நிறுவனத்தால், சுரங்கப்பாதை அமைக்கும் பணி நடந்து வருகிறது.சுரங்கப்பாதை பணி குறித்து, மெட்ரோ நிறுவன அதிகாரிகள் கூறியதாவது: பூந்தமல்லி சாலையின் கீழ் சுரங்கப்பாதை பணி முழுவதுமாக முடிந்து, மின் சாதனங்கள் பொருத்தும் பணி நடந்து வருகிறது. சுரங்கப்பாதைக்கு செல்வதற்கு, சென்ட்ரல் வளாகத்திலும், ராஜீவ்காந்தி மருத்துவமனை அருகிலும், சிமென்ட் படிக்கட்டுகள் கட்டப்பட்டுள்ளன. படிக்கட்டு அருகே, நகரும் மின் ஏணிகள் நிறுவும் பணி துரிதமாக நடந்து வருகிறது. வரும், நவம்பரில் பயணியர் பயன்பாட்டுக்கு சுரங்கபாதை திறந்துவிட திட்டமிடப்பட்டுள்ளது. இந்த சுரங்கப்பாதை திறக்கப்பட்டால், பூந்தமல்லி சாலையை, பயணியர், பொதுமக்கள் ஆபத்தான நிலையில் கடப்பது முற்றிலும் தடுக்கப்படுக்கம். இவ்வாறு அவர்கள் கூறினர்.