திருவொற்றியூர்-அணுகு சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த, ௩ கோடி ரூபாய் மதிப்பிலான மூன்று மாடி கட்டடம், நீர்நிலையை ஆக்கிரமித்த ௧௦ கடைகள் ஆகியவற்றுக்கு, மாநகராட்சி அதிகாரிகள் 'சீல்' வைத்தனர்.சென்னை திருவொற்றியூர் மண்டலம், 6வது வார்டு கலைஞர் நகர் பிரதான சாலையில், சவுகார்பேட்டையைச் சேர்ந்த பிரமோத் ஜெயின் என்பவருக்கு சொந்தமான வணிக வளாக கட்டடம் உள்ளது.இக்கட்டடம், அணுகு சாலையை ஆக்கிரமித்து, திட்ட அனுமதியின்றி கட்டப்பட்டுள்ளது. இது குறித்து, கட்டட உரிமையாளருக்கு 'நோட்டீஸ்' வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று காலை, கடைகளுக்கு சீல் வைக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.மண்டல உதவி கமிஷனர் பால்தங்கதுரை, உதவி செயற்பொறியாளர் பாபு ஆகியோர் தலைமையில், உதவி பொறியாளர்கள் மற்றும் மாநகராட்சி ஊழியர்கள், வணிக வளாகத்தின் தரை தளத்தில் உள்ள தேநீர், உணவகம், அரிசி, பலசரக்கு உள்ளிட்ட 11 கடைகளுக்கும், முதல் மற்றும் இரண்டாம் தளத்தில் உள்ள தங்கும் விடுதி களுக்கும் சீல் வைத்து நோட்டீஸ் ஒட்டினர்.சீல் வைக்கப்பட்ட கட்டடத்தின் மொத்த மதிப்பு 3 கோடி ரூபாய் என, மாநகராட்சி அதிகாரிகள் கூறினர்.இந்நிலையில், வணிக வளாகத்தில் வாடகைக்கு கடை வைத்திருக்கும் தங்களுக்கு முறையான அறிவிப்பு வழங்கவில்லை என, வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், கடையிலுள்ள பொருட்களை எடுக்க சில மணி நேரம் அவகாசம் கேட்டனர்.இதற்கு அனுமதி அளித்து, பொருட்கள் வெளியே எடுக்கப்பட்டதும் அனைத்து கடைகளுக்கும் சீல் வைக்கப்பட்டது. அதே போல் 7வது வார்டு, கெனால் சாலையை ஒட்டிய நீர்நிலை புறம்போக்கு நிலத்தில், சீனிவாசன் என்பவர் ௧௦ கடைகள் கட்டிக் கொண்டிருந்தார்.இந்த ௧௦ கடைகளையும் மாநகராட்சி அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர். அப்போது, அதிகாரிகளின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து 50க்கும் மேற்பட்ட பெண்கள் அங்கு திரண்டனர்.அதில் இளம்பெண் ஒருவர், தற்கொலை மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பின், போலீசார் அவர்களை சமாதானம் செய்து கலைந்து போகச் செய்தனர்.