வண்ணாரப்பேட்டை-நன்னடத்தை விதியை மீறியவருக்கு 83 நாட்கள் பிணையில் வெளிவர முடியாத வகையில், சிறை தண்டனை விதிக்கப்பட்டது.சென்னை பழைய வண்ணாரப்பேட்டை, மேயர் வாசுதேவன் தெருவைச் சேர்ந்தவர் விக்னேஷ்வரன், 24. தண்டையார்பேட்டை காவல் நிலைய சரித்திர பதிவேடு குற்றவாளி. இவர் மீது ஆறு வழக்குகள் உள்ளன.விக்னேஷ்வரன் கடந்தாண்டு டிச., 14ல், வண்ணாரப்பேட்டை துணை கமிஷனர் முன்பு ஆஜராகி, திருந்தி வாழப்போவதாகவும், ஒரு வருட காலத்திற்கு எந்த குற்றச் செயல்களிலும் ஈடுபடமாட்டேன் என, நன்னடத்தை உறுதிமொழி பத்திரம் எழுதிக் கொடுத்தார்.இதனிடையே, கடந்த 15ம் தேதி, கஞ்சா விற்றது தொடர்பாக ஆர்.கே.நகர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.எனவே, நன்னடத்தை பிணை ஆவணத்தை மீறிய குற்றத்திற்காக, செயல்முறை நடுவரும் வண்ணாரப்பேட்டை துணை கமிஷனருமான சிவபிரசாத், எழுதிக் கொடுத்த ஒரு வருடத்தில் மீதமுள்ள 83 நாட்கள், பிணையில் வெளி வரமுடியாத அளவிற்கு விக்னேஷ்வரனுக்கு சிறை தண்டனை விதித்து நேற்று உத்தரவிட்டார்.அதன்படி, விக்னேஷ்வரன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.