சாயல்குடி: சாயல்குடி பேரூராட்சி அலுவலகம் முன்பு கொரோனா தடுப்பூசி முகாம் விளம்பர போர்டில் மத்திய அரசின் வாசகங்கள்,பிரதமர் நரேந்திர மோடியின் போட்டோ இடம்பெறாததை கண்டித்து கடலாடி ஒன்றியதலைவர் கோபாலகிருஷ்ணன் தலைமையில் பா.ஜ.,வினர் பேரூராட்சி அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்
.பா.ஜ.,வினர் கூறியதாவது:இலவச தடுப்பூசி முகாம் விளம்பர பலகையில் பிரதமர் மோடி படம் இடம் பெற வேண்டும் என கடலாடி ஒன்றிய பா.ஜ.,சார்பில் மனு கொடுக்கப்பட்டது.இந்த விளம்பரத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி, முதல்வர் ஸ்டாலின் ஆகியோரின் படங்கள் உள்ளது. ஆனால் தடுப்பூசி வழங்கிய மத்திய அரசின் பாரதப் பிரதமர் மோடியின் படமில்லை.எனவே இனிவரும் காலங்களில் தடுப்பூசி குறித்த விளம்பரங்களில் பிரதமர் நரேந்திர மோடியின் படம் இருக்க வேண்டும் என செயல் அலுவலரிடம் கோரிக்கை மனு கொடுத்து உள்ளோம் என்றனர்.மாநில பொதுக்குழு உறுப்பினர் முருகேசன், மாவட்ட செயலாளர் ராமசாமி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் கதிர்வேல், மாவட்ட விவசாய அணி துணைத் தலைவர் சத்தியமூர்த்தி, ஒன்றிய பொதுச் செயலாளர் ராஜசேகர் உட்பட ஏராளமான பா.ஜ.,வினர் கலந்து கொண்டனர்.இதுகுறித்து உயர் அதிகாரியின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததை அடுத்து பா.ஜ.,வினர் கலைந்து சென்றனர்.