சேலம்: சேலம், நான்கு ரோடு அருகே, சர்வீஸ் சாலை அமைக்கும் பணி நடக்கிறது. அதற்காக, அப்பகுதியில் உள்ள அம்மன் கோவிலை இடிக்க, மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதுதொடர்பாக, அஸ்தம்பட்டி தாசில்தார் அலுவலகத்தில் நேற்று முன்தினம் பேச்சு நடந்தது. அதில், தாசில்தார் செம்மலை, மாநில நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், ஹிந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், பள்ளப்பட்டி போலீசார், பெரமனூர், அரிசிபாளையம் மக்கள் பங்கேற்றனர். இதுகுறித்து, மாநில நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறியதாவது: கோவில் நிலம், தனியாரை சேர்ந்தவர்கள் பெயரில் உள்ளது. 30 ஆண்டுக்கு முன், கோவிலுக்கு நிலம் எழுதி கொடுக்கப்பட்டது என மக்கள் தெரிவித்தனர். இதனால் நிலத்துக்குரிய பழைய ஆவணங்களை, ஒரு வாரத்தில் சரிபார்க்க, வருவாய்த்துறைக்கு தாசில்தார் உத்தரவிட்டுள்ளார். மேலும், அதே பகுதியில் உள்ள வீட்டு வசதி வாரிய இடத்தில் கோவிலை அமைப்பது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. இவ்வாறு அவர்கள் கூறினர்.