ப.வேலூர்: ப.வேலூர் தாலுகா கந்தம்பாளையம் அருகே கிரானைட் குவாரிகளுக்கு அனுமதியளிப்பது குறித்து பொதுமக்களிடையே கலந்தாய்வு கூட்டம் மணியனூரில் நடந்தது. கலெக்டர் ஸ்ரேயா சிங் தலைமை வகித்தார். சித்தம்பூண்டி ஊராட்சிக்குட்பட்ட பெரிய சூரம்பாளையம், சின்ன சூரம்பாளையம் மற்றும் கொளத்துப்பாளையம் ஆகிய பகுதிகளில் ஏற்கனவே இயங்கி வந்த தனியார் கிரானைட் குவாரிகளுக்கு அனுமதியளிப்பது, புதிதாக ஒரு தனியார் குவாரியை அமைப்பது குறித்து பொதுமக்களின் கருத்துகளை கேட்பதற்காக இக்கூட்டம் நடந்தது. பல்வேறு கருத்துகளை பொதுமக்கள் எடுத்துரைத்தனர். அதற்கு பதிலளித்த மாவட்ட சுற்றுச்சூழல் பாதுகாப்பு பிரிவு பொறியாளர் கோபாலகிருஷ்ணன், 'பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் தனியார் கிரானைட் குவாரிகளுக்கு அனுமதியளிப்பது குறித்து நடந்த இந்த கருத்து கேட்பு கூட்டத்தில் வரவேற்பும், ஆட்சேபமும் உள்ளது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்டவர்களின் பதிவு மாநில சுற்றுச்சூழல் பாதுகாப்பு தாக்கம் குறித்த குழுவினருக்கு கடிதமாக அனுப்பி வைக்கப்படும். அவர்கள் அக்கடிதத்தை பரிசீலித்த பின்னரே குவாரிகளுக்கு அனுமதி வழங்க முடிவெடுக்கப்படும்' என, தெரிவித்தார்.