நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் அதிக குழந்தைகளை பெற்றுக்கொள்ளும் தாய்மார்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து, கலெக்டர் ஸ்ரேயா சிங் பொதுமக்களுடன் கலந்துரையாடினார். கொல்லிமலை தேனூர்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் கட்டுப்பாட்டில், 4 ஊராட்சிகளும், 51 கிராமங்களும், 17 அங்கன்வாடி மையங்களும் உள்ளன. இந்த அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்குட்டபட்ட பகுதிகளில், 4,336 ஆண்களும், 4,212 பெண்களும் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் நடமாடும் மருத்துவ குழுக்களின் மூலம் பொதுமக்களுக்கு மருத்துவ சிகிச்சை மேற்கொள்ளப்படுவது, பழங்குடியினர் சிறப்பு நடமாடும் மருத்துவ குழு வாகனம் மூலம் மருத்துவர்கள் பொதுமக்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிப்பது, இதுவரை நடத்தப்பட்டுள்ள மருத்துவ முகாம்கள், பொதுமக்களுக்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவ சிகிச்சைகள், பரிசோதனைகள் விபரம் மற்றும் காசநோயாளிகள் எண்ணிக்கை குறித்து கலெக்டர் ஸ்ரேயா சிங் கேட்டறிந்தார். அதேபோல், படசோலை கிராமத்தில், 4 குழந்தை பெற்றுக்கொண்ட பெண்ணின் வீட்டிற்கு மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் அங்கன்வாடி பணியாளர்களுடன் சென்ற கலெக்டர், தாயையும், குழந்தைகளையும் பார்வையிட்டு, அவர்களின் குழந்தைகள் பள்ளிக்கு செல்கின்றனவா என்று கேட்டறிந்து ஆரோக்கியமான வாழ்விற்கு அறிவுரை வழங்கினார்.