தர்மபுரி: உள்ளாட்சி இடைத்தேர்தலில், மனு தாக்கல் செய்த மற்ற வேட்பாளர்களை தங்களுக்கு ஆதரவாக செயல்படும் வகையில், தி.மு.க.,-அ.தி.மு.க.,வினர் சுற்றி வளைத்து வருகின்றனர்.
தர்மபுரி மாவட்டத்தில், ஒரு மாவட்ட கவுன்சிலர், ஒரு பஞ்., தலைவர், 12 பஞ்., வார்டு உறுப்பினர்களுக்கான இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு அதற்கான வேட்புமனு தாக்கல் நேற்று முன்தினம் முடிந்தது. இதில், 18 வார்டு மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு மட்டும், தி.மு.க.,- அ.தி.மு.க.,வினர் உட்பட, 12 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். அ.தி.மு.க., ஆட்சியின் போதே அந்த வார்டில், தி.மு.க., வெற்றி பெற்ற நிலையில், தற்போது ஆளும் கட்சியாக உள்ள, தி.மு.க., அந்த வார்டை கைப்பற்ற, இறந்த கவுன்சிலரின் மனைவி லதாவை அந்த வார்டில் நிறுத்தியுள்ளது. தி.மு.க.,வுக்கு போட்டியாக அந்த வார்டை கைப்பற்ற, அ.தி.மு.க.,வும் முனைப்போது செயலாற்றுகிறது. அத்தொகுதி எஸ்.டி., பொதுத்தொகுதி என்பதால், தி.மு.க., மற்றும் அ.தி.மு.க.,வினர், இந்த வார்டில் போட்டியிடும் மற்ற வேட்பாளர்களை தங்களுக்கு ஆதரவாக வளைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.