வேட்பாளர்களுக்கு நிபந்தனை: இளைஞர்கள் பேனரால் பரபரப்பு | திருப்பத்துார் செய்திகள் | Dinamalar
வேட்பாளர்களுக்கு நிபந்தனை: இளைஞர்கள் பேனரால் பரபரப்பு
Advertisement
 

பதிவு செய்த நாள்

24 செப்
2021
18:34

ஆம்பூர்: 'தேர்தலில் வெற்றி பெற்றதும் செலவு செய்த பணத்தை எடுத்து விடலாம் என நினைத்து யாரும் போட்டியிட வேண்டாம்' என, ஆம்பூர் அருகே இளைஞர்கள் வைத்த பேனரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அருகே மோதகபல்லி கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள், ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுபவர்களுக்கு நிபந்தனைகள் விதித்து, அப்பகுதியில் பேனர் வைத்துள்ளனர். அதில் கூறியிருப்பதாவது: மோதகபல்லி ஊராட்சியில் தலைவர், வார்டு, ஒன்றியக் குழு உறுப்பினர் பதவிகளுக்கு போட்டியிடும் வேட்பாளர்களுக்கு அன்பான அறிவிப்பு: ஊராட்சி தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றதும், தேர்தலில் செலவு செய்த பணத்தை ஊராட்சி வளர்ச்சிக்கு வரும் பணத்தில் எடுத்து விடலாம் என நினைத்து யாரும் போட்டியிட வர வேண்டாம். கிராம சபை கூட்டங்களில், இங்குள்ள இளைஞர்களால் வரவு, செலவு கணக்கு கேட்டு அறியப்படும். தகவல் அறியும் உரிமை சட்டத்தில் அவை உண்மையாக இருக்கிறதா என சரி பார்க்கப்படும். அதில் ஊழல் நடைபெற்றது கண்டுபிடிக்கப்பட்டால் ஊழல் செய்தவரின் படம் சமூக வலைதளங்களில் வெளியிடுவதுடன், முதலமைச்சர் தனிப்பிரிவு, மாவட்ட கலெக்டர், செய்தி ஊடகங்களில் புகார் அளிக்கப்படும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது குறித்து மோதகபல்லி கிராம இளைஞர்கள் கூறியதாவது: தேர்தலில் போட்டியிட ஒவ்வொரு வேட்பாளரும் பல லட்சம் ரூபாய் செலவிடுகின்றனர். வெற்றி பெற்றதும் அதை விட 10 மடங்கு வளர்ச்சி நிதிக்கு வரும் பணத்தில் ஊழல் செய்து சம்பாதித்து விடுகின்றனர். இதற்காக போட்டியிட நிறைய பேர் வருவதால் இந்த பேனர் வைக்கப்பட்டுள்ளது. ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள இளைஞர்கள் இது போன்ற பேனர்களை வைக்க முன் வர வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

 

Advertisement
மேலும் வேலூர் கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X