கடலுார-விருத்தாசலம் அருகே நடந்த ஆணவ கொலை வழக்கில், பெண்ணின் சகோதரருக்கு துாக்கு தண்டனை விதிக்கப்பட்டது.
பெண்ணின் தந்தை மற்றும் ஓய்வு பெற்ற டி.எஸ்.பி., இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட 12 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து, கடலுார் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.கடலுார் மாவட்டம் விருத்தாசலம் அருகே குப்பநத்தம் புதுக்காலனியைச் சேர்ந்தவர் சாமிக் கண்ணு மகன் முருகேசன், 25; ஆதிதிராவிட சமுதாயத்தைச் சேர்ந்தவர். அதேப் பகுதியில் மற் றொரு சமூகத்தைச் சேர்ந்தவர் முன்னாள் ஊராட்சி தலைவர் துரைசாமி மகள் கண்ணகி, 22; . இருவரும் காதலித்து 2003 மே 5ம் தேதி கடலுாரில் பதிவு திருமணம் செய்து கொண்டனர்.
விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் அருகே மூங்கில்துறைப்பட்டில் உள்ள உறவினர் வீட்டில் கண்ணகியை தங்க வைத்தார். ஸ்ரீமுஷ்ணம் அடுத்த வண்ணாங்குடிகாட்டிலுள்ள உறவினர் வீட்டில் முருகேசன் தங்கினார்.எரித்துக்கொலைகண்ணகியை காணாமல் தேடிய உறவினர்கள், காதல் விவகாரம் தெரிந்ததால் அதிர்ச்சியடைந்தனர். அதே ஆண்டு ஜூலை 7 ம் தேதி, முருகேசனின் சித்தப்பா அய்யாசாமி மூலமாக முருகேசன், கண்ணகியை அழைத்து வந்தனர். இருவரின் காது, வாயில் விஷம் ஊற்றி கொலை செய்து, உடலை எரித்துள்ளனர்.இது குறித்து முருகேசனின் தந்தை சாமிக்கண்ணு விருத்தாசலம் போலீசில் புகார் கொடுத்தார். இந்த விவகாரம் சில நாட்களில் வெளிச்சத்திற்கு வந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப் பதிந்தனர். முருகேசன்- கண்ணகி இருவரும் ஜாதி மாறி திருமணம் செய்ததால் அவரவர் உறவினர்கள் தங்களது பிள்ளைகளை கொலை செய்ததாகக் கூறி, இரு தரப்பிலிருந்தும் தலா 4 பேரை கைது செய்தனர்.சி.பி.ஐ.,க்கு மாற்றம்இது ஆணவ கொலை என்றும், சி.பி.ஐ., விசாரிக்க வேண்டும் என பல்வேறு அமைப்புகள் வலியுறுத்தின.
அதையடுத்து, வழக்கு சி.பி.ஐ., விசாரணைக்கு 2004ல் மாற்றப்பட்டது. விசாரணை நடத்திய சி.பி.ஐ., அதிகாரிகள், வழக்கை மூடிமறைக்க முயன்றதாக அப்போதைய விருத்தாசலம் சப் இன்ஸ்பெக்டர் தமிழ்மாறன் (தற்போது இன்ஸ்பெக்டராக உள்ள இவர், லஞ்சம் வாங்கியதாக கைதாகி சஸ்பெண்டில் உள்ளார்). அப்போதைய விருத்தாசலம் இன்ஸ்பெக்டர் செல்லமுத்து (டி.எஸ்.பி.,யாகி ஓய்வு பெற்றுள்ளார்) மற்றும் கண்ணகியின் தந்தை துரைசாமி, சகோதரர் மருதுபாண்டி உள்ளிட்ட 15 பேரை வழக்கில் குற்றவாளிகளாக சேர்த்தனர். இந்த வழக்கு தொடர்பாக, 660 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. கடலுார்
மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி தனபால் முன்னிலையில் 2017 ல் வழக்கு விசாரணைக்கு வந்தது. பின்னர் எஸ்.சி, எஸ்.டி., சிறப்பு நீதிமன்றத்திற்கு வழக்கு மாற்றப்பட்டு நடந்தது. மொத்தம் 81 சாட்சிகள் விசாரிக்கப்பட்ட நிலையில், 37 சாட்சிகள் பிறழிய சாட்சிகளாகின. விசாரணை நடந்த நிலையில், ஏப்., 7 ம் தேதி, விசாரணை முடிந்து நீதிபதி உத்தமராஜா நேற்று தீர்ப்பு கூறினார்.துாக்கு தண்டனைமுருகேசன் உறவினர்கள் அய்யாசாமி, 61; குணசேகரன், 59; ஆகியோர் மிரட்டப்பட்டு அழைத்து வரப்பட்டுள்ளனர். எனவே, அவர்களுக்கு இக்கொலையில் சம்பந்தம் இல்லாததால் விடுதலை செய்யப்படுகின்றனர். மீதமுள்ள 13 பேரும் குற்றவாளிகள் என, நீதிபதி அறிவித்தார்.தொடர்ந்து தண்டனை விபரங்களை அறிவிக்கையில், கொலைக்கு முக்கிய காரணமான பெண்ணின் சகோதரர் மருதுபாண்டியனுக்கு, 46; துாக்கு தண்டனை, ரூ.4.65 லட்சம் அபராதமும், பெண்ணின் தந்தை துரைசாமி, 68; உறவினர்கள் ரங்கசாமி, 45; கந்தவேலு, 54; ஜோதி, 53; மணி, 66; தனவேல், 49; அஞ்சாபுலி, 47; ராமதாஸ், 52; சின்னதுரை, 50; ஆகியோருக்கு ஆயுள் தண்டனை, தலா ரூ.4.15 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.
கொலை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் சிலருக்கு 2 முதல் 3 ஆயுள் தண்டனை விதித்து ஏக காலத்தில் அனுபவிக்க நீதிபதி உத்தரவிட்டார். ஓய்வு பெற்ற டி.எஸ்.பி., செல்லமுத்து, 66; இன்ஸ்பெக்டர் தமிழ்மாறன், 51; ஆகியோருக்கு எஸ்.சி., எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் ஆயுள் தண்டனையும் தலா ரூ.1.15 லட்சம் அபராதமும் விதித்தார். மேலும், இருவரும் தலா ரூ.3 லட்சத்தை பாதிக்கப்பட்ட முருகேசன் குடும்பத்தினருக்கு வழங்க உத்தரவிடப்பட்டது.தண்டனை விதிக்கப்பட்ட 13 பேரும் பலத்த பாதுகாப்புடன் கடலுார் மத்திய சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். தமிழகத்தை உலுக்கிய கண்ணகி- முருகேசன் ஆணவக் கொலை வழக்கில் ஒருவருக்கு துாக்கு, காவல்துறையைச் சேர்ந்த இருவர் உள்ளிட்ட 12 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து, நீதிபதி தீர்ப்பு கூறியது. பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தீர்ப்பை முன்னிட்டு கடலுார் கோர்ட் வளாகத்தில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. விருத்தாசலம் புதுக்கூரைப்பேட்டை கிராமத்தில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. இந்த வழக்கை சி.பி.ஐ., தரப்பில் வழக்கறிஞர் டோமினிக் விஜய் நடத்தினார். 17 ஆண்டு கடந்த வழக்குகண்ணகி- முருகேசன் கொலை சம்பவம் 2003 ஜூலை 8 ம் தேதி நடந்தது. 17 ம் தேதி வழக்கு பதிவு செய்யப்பட்டது.
2004ல் சி.பி.ஐ., விசாரணைக்கு மாற்றப்பட்டது. 2009 மார்ச் 9ல் சி.பி.ஐ., குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது, 2017 ல் விசாரணை துவங்கியது, மிரட்டல் காரணமாக வழக்கின் முக்கிய சாட்சி செல்வராஜ் 2017 ஆக., 31ல் தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து சாட்சிகள் போலீஸ் பாதுகாப்புடன் கோர்ட்டிற்கு வந்தனர். ஏப்., 4ம் தேதி விசாரணை முடிந்து நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. இந்த வழக்கு 17 ஆண்டுகளை கடந்து முடிவுக்கு வந்துள்ளது.