திக்...திக் கொள்ளிடக்கரை கிராமங்களில் முதலை அச்சம்...நிரந்தர தீர்வுக்கு நடவடிக்கை எடுக்க கோரிக்கை | கடலூர் செய்திகள் | Dinamalar
திக்...திக் கொள்ளிடக்கரை கிராமங்களில் முதலை அச்சம்...நிரந்தர தீர்வுக்கு நடவடிக்கை எடுக்க கோரிக்கை
Advertisement
 

பதிவு செய்த நாள்

25 செப்
2021
04:25

சிதம்பரம்-சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் கொள்ளிடக்கரையோர கிராமங்களில் முதலைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளதால், பண்ணை அமைத்து, நிரந்தர தீர்வுக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.



கொள்ளிடம் அணைக்கரையில் வசித்து வரும் முதலைகள், ஆண்டு தோறும் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கும் போது, கொள்ளிடம் ஆற்றின் வழியாக சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் பகுதி பாசன வாய்க்கால்கள் வழியாக இளநாங்கூர், சிவாயம், செட்டிமேடு, நாஞ்சலுார், பழைய கொள்ளிடம், வடக்கு ராஜன் பாசன வாய்க்கால், மேலப்பருத்திக்குடி, பெராம்பட்டு, கூத்தன் கோவில், வேளக்குடி, அகரநல்லுார், வல்லம்படுகை, கடவாச்சேரி, ஜெயங்கொண்டபட்டினம், பிச்சாவரம் உள்ளிட்ட ஆற்றங்கரையோர கிராம நீர்நிலைகளில் தங்கி விடுகின்றன.இந்த முதலைகள், அந்த பகுதியில் ஆற்றில் இறங்கும் பொது மக்கள், கால்நடைகளை கடித்து இழுத்துச் செல்கின்றன. கடந்த 2006ம் ஆண்டு, சிதம்பரம் அடுத்த குமராட்சியில் பாசன வாய்க்காலில் குளித்த வாலிபரை முதலை கடித்தது. தொடர்ந்து முதலை கடியால் பாதித்தவர்களின் எண்ணிக்கை ஆண்டு தோறும் அதிகரித்து வருகிறது.



கடந்த 15 ம் தேதி, சிதம்பரம் அருகே பழைய நல்லுார் கிராமத்தில் கோபாலகிருஷ்ணன், 65; என்ற விவசாயி பழைய கொள்ளிடம் ஆற்றில் குளித்தபோது முதலை கடித்து இழத்துச் சென்றது. மறுநாள் சடலமாக அவர் உடல் மீட்கப்பட்டது. இறந்துபோன கோபாலகிருஷ்ணனின் சகோதரர் அறிவானந்தம் என்பவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கொள்ளிடம் ஆற்றில் குளிக்கச் சென்ற போது முதலை இழுத்துச் சென்று கடித்துக் குதறியதால் இறந்தார். கோபாலகிருஷ்ணன் இறந்த அடுத்தடுத்த நாட்களில், பனங்காடு என்ற பகுதியில் ஒரே நாளில் இரண்டு பேர் முதலை கடிக்கு ஆளாகினர். இதே போன்று, கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் 25க்கும் மேற்பட்டோர் முதலை கடித்து இறந்துள்ளனர். நுாற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளின் உயிரிழப்பும் அதிகம் ஏற்படுகின்றன.சிதம்பரம் மற்றும் காட்டுமன்னார்கோவில் பகுதிகளில் பிடிபடும் முதலைகள், சிதம்பரம் அருகே வக்காரமாரியில் உள்ள நகராட்சி நீரேற்று நிலைய குளத்தில் விடப்படுகிறது.



கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் திறக்கும் போதும், வெள்ள பாதிப்பு ஏற்படும் போதும், அங்கிருந்து முதலைகள் வெளியேறி மீண்டும் ஊருக்குள் வந்து விடுகின்றன.தொடர்ந்து முதலைகள் வக்காரமாரியில் விடுவதும், வெள்ளம் மற்றும் வறட்சி காலங்களில் முதலைகள் வெளியேறி, அருகிலுள்ள கிராமங்களில் புகுந்து கால்நடைகளை கடித்துக் குதறுவது தொடர்கதையாக உள்ளது. இதனால், கொள்ளிடக்கரை கிராம மக்கள் இரவு நேரங்களில் முதலை அச்சத்தால் துாக்கமின்றி தவித்து வருகின்றனர்.சிதம்பரம் பகுதியில் முதலை பண்ணை அமைத்து, முதலைகள் வெளியில் வர முடியாத அளவில் விட வேண்டும் என, பொது மக்கள் கடந்த 10 ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.



இது தொடர்பாக, சிதம்பரம் முன்னாள் எம்.எல்.ஏ.,பாலகிருஷ்ணன், தற்போதைய எம்.எல்.ஏ., பாண்டியன் சட்டசபையில் கோரிக்கை வைத்தனர். ஆனாலும், இது வரை நடவடிக்கை எடுக்கவில்லை.எனவே, இனியும் காலம் தாழ்த்தாமல், முதலை அச்சத்தில் இருந்து கிராம மக்கள் மீளவும், அவர்களுக்கு பாதுகாப்பு மற்றும் இரவு நேரங்களில் நிம்மதியாக துாங்க முதலை பண்ணை அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் மூலம், பாதித்தவர்களுக்கு அரசு சார்பில் நிவாரண உதவியும் வழங்க வேண்டியது இருக்காது.

 

Advertisement
மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X