புழல், பூண்டி, சோழவரம் ஏரிகளில் தலைமை செயலர்.. திடீர் ஆய்வு! மழை முன்னெச்சரிக்கை பணிகள் குறித்து அறிவுரை
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 செப்
2021
07:22

வடகிழக்கு பருவ மழை துவங்கவுள்ள நிலையில், சென்னைக்கு குடிநீர் வழங்கும் மூன்று ஏரிகளில் தலைமைச் செயலர் இறையன்பு, நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக, பல்வேறு ஆலோசனைகளை நீர்வளத் துறையினருக்கும், மாவட்ட அதிகாரிகளுக்கும் வழங்கினார்.



திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள புழல், பூண்டி, சோழவரம், செம்பரம்பாக்கம் ஏரிகள் வாயிலாக, சென்னையின் குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்படுகிறது. வடகிழக்கு பருவமழையால், இந்த ஏரிகளுக்கு நீர்வரத்து கிடைக்கிறது. இதுமட்டுமின்றி, ஆந்திராவின் கண்டலேறு அணையில் இருந்தும், தெலுங்கு கங்கை ஒப்பந்தப்படி நீர் திறக்கப்படுகிறது.



நீர் இருப்பு




கடந்தாண்டு பெய்த மழை நீர், நான்கு ஏரிகளிலும் தேங்கி இருந்தது. ஜூன் முதல் கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு நீர் திறக்கப்பட்டது. இவ்வாறு கிடைத்த நீர், பூண்டி, புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளில் சேமிக்கப்பட்டுள்ளது.அதிகபட்சமாக, 3.30 டி.எம்.சி., கொள்ளளவு உள்ள புழல் ஏரியில் 3.05 டி.எம்.சி.,யும், 3.64 டி.எம்.சி., கொள்ளளவு உள்ள செம்பரம்பாக்கம் ஏரியில் 2.89 டி.எம்.சி.,யும், 3.23 டி.எம்.சி., கொள்ளளவு உள்ள பூண்டி ஏரியில் 2.52 டி.எம்.சி.,யும், 1.08 டி.எம்.சி., கொள்ளளவு உடைய சோழவரம் ஏரியில் 0.64 டி.எம்.சி.,யும் நீர் இருப்பு உள்ளது.



இதுமட்டுமின்றி, சென்னையின் குடிநீர் தேவைக்கு புதிதாக உருவாக்கப்பட்ட, 0.50 டி.எம்.சி., கொள்ளளவு உடைய தேர்வாய் கண்டிகை ஏரியில், 0.46 டி.எம்.சி., நீர் இருப்பு உள்ளது. ஐந்து ஏரிகளிலும் சேர்த்து, மொத்தமாக, 9.57 டி.எம்.சி., நீர் இருப்பு உள்ளது. அடுத்த மாதம் வடகிழக்கு பருவமழை துவங்கவுள்ளது. அதற்கு முன்பே குடிநீர் ஏரிகள் நிரம்பும் கட்டத்தில் உள்ளன. இந்நிலையில், பூண்டி ஏரியில் நீர் கசிவு ஏற்பட்டது குறித்தும், புழல் ஏரியில் அபாய கட்டத்தை தாண்டி நீர் சேமிப்பது குறித்தும், நம் நாளிதழ் சுட்டிக் காட்டியது.



இதன் எதிரொலியாக, தலைமைச் செயலர் இறையன்பு, நேற்று புழல், பூண்டி, செம்பரம்பாக்கம் ஏரிகளில் திடீர் ஆய்வு நடத்தினார்.புழல் ஏரி மதகு பகுதியை ஆய்வு செய்த தலைமை செயலர், கடந்தாண்டு பருவ மழைக்காலத்தில் ஏரியின் நீர் இருப்பு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார். அங்கு, 10 நிமிட ஆய்வுக்கு பின், பூண்டி ஏரிக்கு புறப்பட்டு சென்றார்.



பூண்டியில், ஏரியின் மதகில் ஏற்பட்ட நீர் கசிவை ஆய்வு செய்தார். மதகில் 'ரப்பர் சீல்' பழுதடைந்ததால், நீர்கசிவு ஏற்பட்டுள்ளது. எனவே, நீர் இருப்பு குறைந்தவுடன், அனைத்து மதகிலும், புதிய ரப்பர் சீல் மாற்றும் படியும், அதுவரை நீர்கசிவை தற்காலிகமாக நிறுத்தவும் அறிவுறுத்தினார். ஆந்திராவின் கண்டலேறு அணையில் இருந்து கிருஷ்ணா நீர் பூண்டி ஏரிக்குள் நுழையும் சாய்கங்கை கால்வாயையும் பார்வையிட்டார்.



நீர்த்தேக்க நடைபாதையில் சிறிது துாரம் நடந்து சென்று ஆய்வு செய்தார். பூண்டி ஏரியில் இருந்து சோழவரம் ஏரிக்கு நீர் செல்லும் பேபி கால்வாயை பார்வையிட்டார். அந்த கால்வாய் உரிய பராமரிப்பின்றி மண் சரிந்து கிடந்தது. நீரோட்டம் இருப்பதால், அதன்மேல் பகுதியில் உள்ள புதர்களை அப்புறப்படுத்த உத்தரவிட்டார்.



தண்ணீர் நின்ற பின், நிரந்தரமான சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தினார். அங்கு, 20 நிமிட ஆய்வுக்கு பின், செம்பரம்பாக்கம் ஏரிக்கு சென்றார்.செம்பரம்பாக்கத்தில், 19 கண் மதகு மற்றும் ஐந்து கண் மதகுகளை பார்வையிட்டார்.



அறிக்கை




ஏரியில் தொழிற்சாலை கழிவு நீர் கலப்பு தொடர்பாக வந்த புகார் அடிப்படையில், நீர்வளத்துறை, சென்னை குடிநீர் வடிகால் வாரியம், தமிழ்நாடு தொழில் வளர்ச்சி கழகம், மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலர்கள் அடங்கிய கூட்டு குழுவினர், நீர் மாதிரியை சேகரித்து பரிசோதனைக்கு அனுப்பிஉள்ளனர். அந்த அறிக்கையை விரைவில் சமர்பிக்க அறிவுறுத்தப்பட்டுஉள்ளது. அறிக்கை பெற்றவுடன் உரிய மேல் நடவடிக்கை எடுக்கவும், அதிகாரிகளுக்கு தலைமை செயலர் உத்தரவிட்டார்.



ஏரி நிரம்பினால், உபரிநீரை வெளியேற்ற என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்பது குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.ஆய்வின் போது, பொதுப்பணித் துறை செயலர் சந்தீப் சக்சேனா, திருவள்ளூர் கலெக்டர் ஆல்பிஜான் வர்கீஸ், காஞ்சிபுரம் கலெக்டர் ஆர்த்தி, பொதுப்பணித் துறை உயர் அதிகாரிகள் உடனிருந்தனர்.



விழிப்புடன் இருக்க உத்தரவு!




புழல், பூண்டி, செம்பரம்பாக்கம் ஏரிகளை ஆய்வு செய்தபோது, அதிகாரிகளிடம் பேசிய தலைமை செயலர் இறையன்பு, 'பருவமழைக்கு முன்பே, கடந்தாண்டை விட நடப்பாண்டில் கூடுதலாக நீர் இருப்பு உள்ளது. அடுத்த மாதம் வடகிழக்கு பருவமழை துவங்கவுள்ளதால், கூடுதல் நீர்வரத்து கிடைக்கும். நீர்நிலைகளில் குறிப்பிட்ட கொள்ளளவை தாண்டி, அதிகமாக நீரை சேமிக்கக் கூடாது. நீர்வரத்துக்கு ஏற்றவாறு உபரிநீரை படிப்படியாக வெளியேற்ற வேண்டும். இதற்காக, 24 மணிநேரமும் முழு கவனத்துடனும், விழிப்புடனும் தயார் நிலையில் இருக்க வேண்டும்' என, அறிவுரை வழங்கினார்.



- நமது நிருபர் குழு -

 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X