செங்கல்பட்டு : செங்கல்பட்டு மாவட்டத்தில், எட்டு ஒன்றியங்களில் உள்ள உள்ளாட்சி பதவியிடங்களுக்கு 13 ஆயிரத்து இருபத்தி ஏழு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதன் மீதான பரிசீலனையை, தேர்தல் அலுவலர்கள், அந்தந்த ஒன்றிய அலுவலகங்களில் நேற்று முன்தினம் நடத்தினர்.
இதில் படிவத்தில் பிழை, தவறான சொத்து விபரம் போன்ற காரணங்களால் சிலரின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. மொத்த மனுக்களில் 12 ஆயிரத்து 905 வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டு, 122 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்ட நாள் முதல், காஞ்சிபுரம் மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிகள் முறையாக கடைப்பிடிக்கவில்லை. அரசியல் கட்சியினரின் கொடி கம்பம், சின்னம் ஆகியவற்றை மறைக்காமல் மாவட்ட நிர்வாகம் அலட்சியமாக செயல்படுவதாக, 'தினமலர்' நாளிதழ் சுட்டிக்காட்டியது.
தேர்தல் பணிகளையும் முறையாக செய்யாமல் அசட்டையாக இருப்பதாகவும் கூறப்பட்டிருந்தது. இதன் காரணமாக, தேர்தல் சம்பந்தமான எந்த தகவலையும், 'தினமலர்' நிருபர்களுக்கு தரக்கூடாது என வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.அதற்கேற்ப, வேட்பாளர்கள் அளித்த மனுக்கள் மீதான பரிசீலனை நேற்று முன்தினம் நடந்தது.
இதில் எத்தனை பேரின் மனுக்கள் ஏற்கப்பட்டன; எத்தனை நிராகரிகப்பட்டன என்ற தகவலை, நேற்று முன்தினம் இரவில் இருந்து நேற்று இரவு 9:00 மணி வரை பலமுறை கேட்டும், மாவட்ட கலெக்டர் ஆர்த்தி, பி.ஆர்.ஓ., உள்ளிட்டஉயர்மட்ட அதிகாரிகள் தரவில்லை.
தெளிவில்லாமல் பணிகளை மேற்கொண்டால் அதை சுட்டி காட்டுவது நாளிதழின் கடமை. அதிலும் 'தினமலர்' அதை தவறாமல் செய்யும். இதற்காக, நடத்தப்படும் தேர்தல் சம்பந்தமான தகவல்களை தராமல் காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் அசட்டையாக நடந்து கொள்கிறது. இது சம்பந்தமாக தேர்தல் பார்வையாளிடம் பேசியபோது, 'நான் விசாரித்து நடவடிக்கை எடுக்கிறேன்' என கூறினார். அதன் பிறகும் எந்த நடவடிக்கையும் இல்லை.