திருப்பூர்;ஏற்றுமதியில் நாட்டின் முதன்மை மாநிலமாக தமிழகம் மாறும் என, அமைச்சர் சாமிநாதன் பேசினார்.வெளிநாட்டு வர்த்தகத்துறை இயக்குனரகம் (டி.ஜி.எப்.டி.,) மற்றும் திருப்பூர் மாவட்ட தொழில் மையம் சார்பில், ஏற்றுமதியாளர் சங்கமம் நிகழ்ச்சி, அவிநாசி ஐ.கே.எப்., கண்காட்சி அரங்கில் நேற்று நடந்தது.கண்காட்சியை திறந்து வைத்து, செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் சாமிநாதன் பேசியதாவது:தொழில் துறையினர் நீண்டகாலமாக எதிர்பார்த்த, மாநில ஏற்றுமதி கொள்கை வெளியிடப்பட்டுள்ளது.இதனால், அன்னிய செலாவணியை அதிகளவில் ஈட்டமுடியும்; வேலைவாய்ப்பும் பெருகும். பஞ்சுக்கான ஒரு சதவீத வரி ரத்து செய்யப்பட்டுள்ளது.உலக சந்தையில், மதிப்பு கூட்டப்பட்ட ஆயத்த ஆடைகளின் தேவை அதிகரித்துள்ளது. செயற்கை இழை ஆடை ரகங்களை உற்பத்தி செய்யும் குறு, சிறு நிறுவனங்களுக்கு, தமிழக அரசு, சிறப்பு மானியம் வழங்க உள்ளதால், மதிப்பு கூட்டு ஆடை ஏற்றுமதி அதிகரிக்கும்.திருப்பூர் மாவட்டத்தில், மதிப்பு கூட்டப்பட்ட கயிறு பொருட்கள் தயாரிக்க, ரூ.15 கோடி மதிப்பில் பொது பயன்பாட்டு மையம் அமைப்பது குறித்து அரசு பரிசீலித்து வருகிறது. தமிழக ஏற்றுமதி வர்த்தகம், வரும் 2030ல், 7.30 லட்சம் கோடி ரூபாய் என்ற இலக்கை எட்டிப்பிடிக்கும்.இவ்வாறு, அமைச்சர் பேசினார்.