அ.தி.மு.க., வேட்பாளருக்கு தேர்தல் அதிகாரி சாதகம்: சுயேச்சை வேட்பாளர் குற்றச்சாட்டு; மனுவும் வாபஸ் | ஈரோடு செய்திகள் | Dinamalar
அ.தி.மு.க., வேட்பாளருக்கு தேர்தல் அதிகாரி சாதகம்: சுயேச்சை வேட்பாளர் குற்றச்சாட்டு; மனுவும் வாபஸ்
Advertisement
 

பதிவு செய்த நாள்

25 செப்
2021
14:05

கோபி: அ.தி.மு.க., வேட்பாளருக்கு சாதகமாக உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் நடப்பதாக, புகார் தெரிவித்த சுயேச்சை வேட்பாளர், தனது மனுவையும் வாபஸ் பெற்றார்.


நம்பியூர் தாலுகா கூடக்கரையை சேர்ந்தவர் ராஜலிங்கம், 49; நம்பியூர் பி.டி.ஓ., பிரேமலதாவிடம் நேற்று அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: கூடக்கரை ஊராட்சி தலைவர் பதவிக்கு, அடுத்த மாதம் தேர்தல் நடக்கிறது. நான் சுயேச்சையாக வேட்பு மனு செய்தேன். மனு பரிசீலனை நேற்று முன்தினம் நடந்தது. அப்போது தேர்தல் விதிமீறி சேர்மன் அறையில் அ.தி.மு.க., ஒன்றிய செயலாளர் தம்பி சுப்பிரமணியம் உள்பட, 50க்கும் மேற்பட்டோர் இருந்தனர். இதுகுறித்து உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் தேன்மொழியிடம் சுட்டிக்காட்டினேன். அவர் கண்டு கொள்ளவில்லை. அதேசமயம் அ.தி.மு.க.,வை சேர்ந்த சிவக்குமார் தாக்கல் செய்த வேட்பு மனுவில், பல விபரங்கள் தவறாக இருந்தன. நான் தெரிவித்தும், அதை கண்டு கொள்ளாமல் மனுவில் சில விபரங்களை திருத்த அனுமதித்தார். மேலும் மனுதாக்கல் செய்தவர்களின் விபரத்தை, அறிவிப்பு பலகையில் ஒட்டவில்லை. வேட்பு மனுவை திருத்த, புதிய ஆவணங்களை சேர்க்க, எனக்கு அதிகாரம் உள்ளது. மேலும், அறிவிப்பு பலகையில் ஒட்ட வேண்டிய அவசியம் இல்லை என்று தேன்மொழி கூறினார். அவரை கொண்டு தலைவர் தேர்தலை நடத்தினால் நேர்மையான முறையில் நடக்காது. இதனால் தேர்தலில் இருந்து நான் விலகிக் கொள்கிறேன். தேன்மொழி மீது நடவடிக்கை எடுத்து, என் வேட்பு மனுவை திரும்ப பெற, அனுமதிக்க வேண்டும். இவ்வாறு அவர் மனுவில் தெரிவித்துள்ளார்.


 

Advertisement
மேலும் ஈரோடு மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X