ராமநாதபுரம் : வாலாந்தரவை ஊராட்சியில் இயற்கை எரிவாயு குழாய்களை குடியிருப்பு பகுதிக்குள் கொண்டு செல்வதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.ராமநாதபுரம் அருகே வாலந்தரவை ஊராட்சி தெற்குகாட்டூர் பகுதியில் இருந்து வழுதுார் குடியிருப்பு பகுதிக்குள் எரிவாயு குழாய் பதிக்க மக்கள்தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இப்பகுதியில் ஏற்கனவே அரசு, தனியார் எரிவாயு நிறுவனங்கள் உள்ளன. இதிலிருந்து கிடைக்க கூடிய எரிவாயு ராமநாதபுரம், ராமேஸ்வரம் பகுதி பெட்ரோல் நிலையங்களுக்கு கொண்டு செல்ல மேற்கண்ட பகுதியில் குழாய் பதிக்க திட்டமிட்டுஉள்ளனர். இதனை எதிர்த்து பொது மக்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர். இதுதொடர்பாக ராமநாதபுரம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் ஆர்.டி.ஓ., சேக்மன்சூர் தலைமையில், தாசில்தார் ரவிச்சந்திரன் முன்னிலையில் வழுதுார் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடந்தது. ஏற்கனவே சில இடங்களில் எரிவாயு கசிந்து பனைமரங்கள் தீபற்றிய சம்பவம் நடந்துள்ளது. ஆகையால் எரிவாயு குழாய் பதிக்கும் திட்டத்தை குடியிருப்பகுதியில் கொண்டு செல்லாமல், காலியிடங்கள் உள்ள பழைய வழி அல்லது மாற்றுப் பாதையில் கொண்டு செல்ல மக்கள் வலியுறுத்தினர்.