திருச்சி:'தமிழகம், கேரளா மாநிலங்களில் உள்ள ரயில் நிலையங்களில், மாஸ்க் அணியாமல் உள்ளே வரக்கூடாது என்று அறிவுறுத்தப்படுகிறது' என, தெற்கு ரயில்வே பாதுகாப்பு படை தலைமை துணை கமிஷனர் தெரிவித்தார்.ரயில்வே பாதுகாப்பு படையின் -ஆர்.பி.எப்., 36ம் ஆண்டு எழுச்சி நாள் விழா, திருச்சி, காஜாமலையில் உள்ள தெற்கு ரயில்வே பாதுகாப்பு பயிற்சிப் பள்ளி மைதானத்தில் நேற்று நடந்தது.
தெற்கு ரயில்வே பாதுகாப்பு படை தலைமை துணை கமிஷனர் லுாயிஸ் அமுதன் தலைமையில், பயிற்சி முடித்த ஆர்.பி.எப்., தலைமை காவலர்கள் 1,000 மரக்கன்றுகளை நடவு செய்தனர்.தெற்கு ரயில்வே மண்டல பாதுகாப்பு கமிஷனர் ராமகிருஷ்ணன், தெற்கு ரயில்வே பாதுகாப்பு பயிற்சிப் பள்ளி முதல்வர் சுக்லா ஆகியோர் பங்கேற்றனர்.தலைமை துணை கமிஷனர் லுாயிஸ் அமுதன் கூறியதாவது:கொரோனா காலக்கட்டத்தில் முன்களப் பணியாளர்களாக செயல்பட்டு வரும் ரயில்வே பாதுகாப்புபடை வீரர்களுக்கு, 100 சதவீதம் தடுப்பு ஊசி செலுத்தப்பட்டுள்ளது.
ரயில்வே பாதுகாப்பு படையினர் பயன்பெறும் வகையில், ரயில் நிலையங்களில் தானியங்கி சானிடைசர் கருவிகள் நிறுவப்பட்டு, தேவையான அளவு 'மாஸ்க்'குகள் வழங்கப்பட்டுள்ளது.கொரோனா வைரஸ் 3வது அலையால் பாதிப்பு இருக்கும் என்பதால், தமிழகம், கேரளா மாநிலங்களில் உள்ள ரயில் நிலையங்களில், 'மாஸ்க் அணியாமல் உள்ளே வரக்கூடாது' என்று அறிவுறுத்தப்படுகிறது. 'மாஸ்க்' அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது.இவ்வாறு அவர் கூறினார்.