சென்னை : சென்னை, சிட்லபாக்கம்ஏரி பரப்பளவு வரைபடம், கட்டுமானங்கள், ஆக்கிரமிப்புகள் குறித்த அறிக்கை தாக்கல் செய்யும்படி, அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தாம்பரம், சிட்லபாக்கம் ஏரியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரி, அறப்போர் இயக்கம் சார்பில், உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கு, தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய 'முதல் பெஞ்ச்' முன், விசாரணைக்கு வந்தது.அரசு தரப்பில், கூடுதல்அட்வகேட் ஜெனரல் ரவீந்திரன் ஆஜராகி, ''நீர்நிலைகள் மற்றும் வனப்பகுதி பாதுகாப்பு தொடர்பாக, உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தும் விதத்தில், அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது,'' என்றார்.
முதல் பெஞ்ச் பிறப்பித்த உத்தரவு:சிட்லபாக்கம் ஏரி, அதைச்சுற்றி உள்ள ஆக்கிரமிப்புகள் மற்றும் அரசு நிறுவன கட்டடங்கள், அலுவலக கட்டடங்களை அகற்ற உத்தரவிட்டிருப்பதாகவும், அதை விரைந்து முடிப்பதற்கான அவகாசத்தை தெரிவிப்பதாகவும், கூடுதல் அட்வகேட் ஜெனரல் கூறியுள்ளார்.சட்ட நடைமுறையை பின்பற்றி, தனி நபர் மேற்கொண்டுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கான செயல் திட்டத்தையும்தாக்கல் செய்வதாக தெரிவிக்கப்பட்டது.
எனவே, சிட்லபாக்கம் ஏரியின் முழு அளவு; அதை சுற்றியுள்ள நிலம்; அதில் உள்ள கட்டுமானங்கள், ஆக்கிரமிப்புகள்; அகற்றப்பட்ட விபரங்கள் அடங்கியஅறிக்கையை, வரைபடத்துடன், அரசு தாக்கல் செய்ய வேண்டும்.இவ்வாறு உத்தரவிட்டு உள்ளது.விசாரணையை, வரும், 29க்கு, முதல் பெஞ்ச் தள்ளி வைத்துள்ளது.