சென்னை : சென்னை மாநகர், 'பெண்களுக்கான பாதுகாப்பான நகரம்' என்பதை வலியுறுத்தும் வகையில் மாநகராட்சி, காவல் துறை இணைந்து, நேற்று இரவு, பெண்களுக்கான 'சைக்கிளத்தான்' போட்டியை நடத்தின.'சிங்கார சென்னை - 2.0' திட்டத்தின் ஒரு பகுதியாக, நலமிகு சென்னை என்ற அடிப்படையில், ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தி, பல்வேறு சுகாதார கட்டமைப்புகளை வலுப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும், 75வது சுதந்திர தினத்தின் ஒரு பகுதியாக, உடல் ஆரோக்கியத்தை ஊக்குவிக்கும் வகையில்,ஒரு வார சைக்கிள் பயணம், பூங்காக்களில் உடற்பயிற்சி மேற்கொள்ளுதல்போன்ற பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளன.அதன்படி, பெண்களுக்கான பாதுகாப்பான நகரம்என்பதை வலியுறுத்தும் வகையில், நேற்று இரவு 10:00 மணியளவில், மெரினா, ராதாகிருஷ்ணன் சாலையில் சைக்கிளத்தான் துவங்கப்பட்டது.இதில், பெண் போலீசார் மற்றும் பெண்கள் பலர் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியை, சென்னை மாநகராட்சி துணை கமிஷனர் சினேகா, மயிலாப்பூர் போலீஸ் துணை கமிஷனர் திஷா மிட்டல் ஆகியோர் துவக்கி வைத்தனர்.இதைதொடர்ந்து, கொரோனா தடுப்பூசி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், இன்று காலை 6:00 மணி முதல், ஒரு வாரத்திற்கு, வேளச்சேரி, அண்ணா நகர், ரிப்பன் மாளிகை உள்ளிட்ட 10 இடங்களில், அனைத்து தரப்பினரும் பங்கு பெறும் சைக்கிள் பேரணி நடைபெற உள்ளது.மேலும், இன்று முதல், அக்., 3ம் தேதி வரை, மாநகராட்சியின் 29 முக்கிய பூங்காக்களில், சிலம்பம் கராத்தே, யோகா மற்றும் ஜூம்பா போன்ற விளையாட்டு பயிற்சிகளை மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவோர், தங்களது உடற்பயிற்சிகளை, வீடியோ பதிவு செய்து, 94451 90856 என்ற 'வாட்ஸ் ஆப்' எண்ணிற்கு அனுப்பலாம். இந்த வீடியோக்கள், சென்னை 'ஸ்மார்ட் சிட்டி' சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்யப்படும்.மேலும், மாநகராட்சி ரிப்பன் கட்டடத்தில் செயல்படும் ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு அறையில் நடைபெறும் செயல்பாடுகளை, பள்ளி, கல்லுாரி மாணவர்கள் அறிந்து கொள்ள, இன்று முதல், அக்., 1ம் தேதி வரை பார்வையிடலாம். இதற்கு, 94451 90856 என்ற வாட்ஸ் ஆப் எண்ணில், பள்ளி, கல்லுாரி நிர்வாகத்தினர் பதிவு செய்யலாம்.இதில், 30 நபர்களுக்கு மிகாமல், பங்கேற்கலாம் என, மாகராட்சி தெரிவித்து உள்ளது.