கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி ஒன்றியத்தில் 11வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு தி.மு.க., வேட்பாளர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.
கள்ளக்குறிச்சி ஒன்றியத்தில் 23 ஒன்றிய கவுன்சிலர் பதவிகள் உள்ளது. இதில் 11வது வார்டு (வாணியந்தல், ரங்கநாதபுரம், அரியபெருமானுார்) ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு 12 வேட்பு மனுக்கள் பெறப்பட்டது.வேட்பு மனு பரிசீலனையில் நாம் தமிழர் கட்சி, தே.மு.தி.க., - பா.ஜ., மற்றும் சுயேச்சைகள் இருவர் என 6 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டது. மீதமுள்ள 6 பேர் மட்டுமே களத்தில் இருந்த நிலையில், அ.தி.மு.க., வேட்பாளர் மற்றும் மாற்று வேட்பாளர், சுயேச்சைகள் இருவர் என 5 பேர் தங்களது மனுக்களை வாபஸ் பெற்றுக் கொண்டனர்.
இதனையடுத்து, தி.மு.க., வேட்பாளர் அலமேலு ஆறுமுகம் ஒன்றிய கவுன்சிலராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.தேர்தல் நடத்தும் அலுவலர் மாதேஸ்வரன், தி.மு.க., வேட்பாளர் அலுமேலு ஆறுமுகத்திடம் போட்டியின்றி தேர்வு பெற்றதற்கான படிவத்தினை வழங்கினார். தேர்தல் நடத்தும் அலுவலர் நடராஜன், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் ரங்கராஜன், சாமிதுரை, தி.மு.க., மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர் ஆறுமுகம் உடனிருந்தனர்.