மந்தாரக்குப்பம் : மந்தாரக்குப்பத்தில் வாலிபரை வெட்டி கொலை செய்த வழக்கில் மேலும் இருவரை போலீசார் கைது செய்தனர்.
மந்தாரக்குப்பம் ஒம்சக்தி நகரைச் சேர்ந்தவர் அருண் (எ) அருள்குமார், 35; இவரது மனைவி ரம்யா 9 ஆண்டுகளுக்கு முன் தற்கொலை செய்து கொண்டார். இந்த வழக்கில் அருண் கைதாகி 7 ஆண்டுகள் தண்டனை பெற்று, திருச்சி மத்திய சிறையில் இருந்தார். தண்டனை முடிந்து 4 மாதங்களுக்கு முன் வெளியே வந்தார். பின் சிவகங்கையில் தனியார் வாட்டர் கம்பெனியில் வேலை பார்த்த அவர் கடந்த மாதம் மந்தாரக்குப்பம் ஓம்சக்தி நகரில் உள்ள சித்தி வீட்டில் தங்கியிருந்தார். கடந்த 1ம் தேதி இரவு இரண்டாம் சுரங்க நுழைவு வாயில் முன்பு முட்புதரில் அருண் வெட்டி கொலை செய்யப்பட்டார். இது குறித்து மந்தாரக்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து ஐ.டி.ஐ., நகரை சேர்ந்த பாம்புபாண்டியன் மகன் தேவா, 29; என்பவரை கடந்த 3ம் தேதி கைது செய்தனர். இவ்வழக்கு தொடர்பாக நெய்வேலி வடக்குமேலுாரைச் சேர்ந்த மோகன்தாஸ் மகன் டேவிஸ்பிரவீன், 25, அறிவரதன் மகன் நீலகண்டன், 24 ஆகியோரை நேற்று முன் தினம் கைது செய்து விசாரிக்கின்றனர்.