கோவை:''நாளிதழ் வாசிப்பே எனது வெற்றிக்கு அடித்தளமாக இருந்தது,'' என சிவில் சர்வீஸ் தேர்வில், மாநில அளவில் முதலிடம் பெற்ற நாராயண சர்மா கூறினார்.சிவில் சர்வீஸ் தேர்வில் கோவையை சேர்ந்த நாராயண சர்மா மாநில அளவில் முதலிடமும், தேசிய அளவில், 33வது இடமும் பெற்றுள்ளார். அவர் அளித்த பேட்டி:எனது சொந்த ஊர் நாமக்கல், வளர்ந்தது, படித்தது எல்லாம் கோவையில் தான். எட்டிமடை அமிர்தா பல்கலையில் பி.டெக்., 2017ம் ஆண்டு முடித்தேன். தந்தை வெங்கடேஸ்வர சர்மா, தாய் சுஜாதா இருவரும் தனியார் காப்பீடு நிறுவனத்தில் பணிபுரிகின்றனர். இவர்களின், வழிகாட்டுதலே எனக்கான உத்வேகம்.எனக்கு, 25 வயது. கல்லுாரி இரண்டாமாண்டு படிக்கும்போதே பயிற்சியை துவக்கிவிட்டேன். வாரநாட்கள் கல்லுாரி பாடங்களுக்கும், வார இறுதிநாட்கள் ஐ.ஏ.எஸ்., தேர்வுக்கும் என திட்டமிட்டு படிப்பேன்.தொடர் பயிற்சி அவசியம். தினமும் கட்டாயம் நாளிதழ்களை படிக்க வேண்டும். அதிலுள்ள தகவல் நமக்கு தேர்வில் பல்வேறு வகைளில் உதவியாக இருக்கும். நாளிதழ் வாசிப்பே என் வெற்றிக்கு அடித்தளம். நேர்காணலில், மனித - விலங்கு மோதல் குறித்து கேள்வி எழுப்பினர். நாளிதழ் வாசிப்பு மிகவும் பயனுள்ளதாக இருந்தது.தமிழகத்தில் ஓர் இடத்தை தேர்வு செய்ய விரும்புகிறேன். தொழில்நுட்பம் தற்போது முக்கியம் என்பதால் அதை பயன்படுத்தி மக்களின் வாழ்க்கை தரத்தை மாற்ற முடியும் என்பதை கவனத்தில் எடுப்பேன்.எளிய மக்களுக்கு உதவும் அதிகாரியாக செயல்படுவேன்.இவ்வாறு அவர் கூறினார்.மாற்றுத்திறனாளி இளைஞர்சிவில் சர்வீஸ் தேர்வில் கோவையை சேர்ந்த காது கேளாத மாற்றுத்திறனாளி இளைஞர் ரஞ்சித், 750வது ரேங்க் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார்.இவரது தாயார் அமிர்தவள்ளி இவருக்காகவே, சிறப்பு பி.எட்., படித்து தனியார் காதுகேளாதோர் குழந்தைகளுக்கான சிறப்பு பள்ளியில் தலைமையாசிரியராக உள்ளார்.ரஞ்சித் கூறியதாவது:உதடு அசைவுகளை கொண்டு எதிர் இருப்பவர் பேசுவதை புரிந்துகொள்வேன். பள்ளியில் முன்வரிசையில் அமர்ந்து, ஆசிரியர்கள் வகுப்பு எடுக்கும்போதே கூர்ந்து கவனிப்பேன். கோவை பி.எஸ்.ஜி., பொறியியல் கல்லுாரியில் மெக்கானிக்கல் பிரிவில், 80 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றேன்.ஓராண்டு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்தேன். தாய் அறிவுறுத்தலின் படி, அரசு தேர்வுக்கு தயார்படுத்திக்கொள்ள திட்டமிட்டு முதலில் வங்கி தேர்வுக்கு பயிற்சி எடுத்தேன். யு.பி.எஸ்.சி., தேர்வுக்கு, 2019 முதல் சுயமாக பயிற்சி பெற்றேன்.தமிழ் வழியிலேயே தேர்வுகளை எதிர்கொண்டேன். அரசு தேர்வுகள் எதுவாயினும் உடல் குறைபாடு ஓர் தடையில்லை. ஆர்வமும், முயற்சியும் மட்டுமே போதுமானது.இவ்வாறு, அவர் கூறினார்.