சென்னை : தமிழக அரசுக்கு எதிராக, ஆளும்கட்சியின் தொழிற்சங்கமான டாஸ்மாக் தொழிலாளர் முன்னேற்ற சங்கம், டாஸ்மாக் தலைமை அலுவலகம் முற்றுகை மற்றும் கடையடைப்புப் போராட்டத்தை அறிவித்துள்ளது.
தமிழகத்தில், 6700க்கும் அதிகமான மதுக்கடைகளில், 27 ஆயிரத்துக்கும் அதிகமான பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் பணி நிரந்தரம், ஊதிய உயர்வு, பணியாளர்களுக்கு பாதுகாப்பு, பணி மாறுதல் என பல்வேறு கோரிக்கைகளை நீண்ட காலமாக வலியுறுத்தி வருகின்றனர்.தற்போது தமிழக அரசுக்கு எதிராக ஆளும்கட்சியின் டாஸ்மாக் தொழிலாளர் முன்னேற்ற சங்கம், அடுத்தடுத்த போராட்டங்களை அறிவித்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வரும் 28ம் தேதி, டாஸ்மாக் தலைமை அலுவலக முற்றுகைப் போராட்டமும், அக்.,4ல் கடையடைப்பு போராட்டமும் நடைபெறும் என்று இந்த சங்கத்தின் மாநிலத்தலைவர் ராஜவேல் தெரிவித்துள்ளார்.
வெறும் 500 ரூபாய் ஊதிய உயர்வு கொடுத்ததை எதிர்த்தும், பணி நிரந்தரம் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தியும் இந்த போராட்டம் நடப்பதாக தொழிற்சங்கம் சார்பில் விளக்கம் தரப்பட்டுள்ளது. ஆனால் தி.மு.க., தொழிற்சங்கத்திலுள்ள டாஸ்மாக் பணியாளர்களுக்கு நல்ல வருவாய் உள்ள கடைகளைத் தர வேண்டுமென்று மாவட்ட வாரியாக பட்டியல் தயாரித்து, அமைச்சரிடம் கொடுத்ததற்கு அவர் அதை நிராகரித்து விட்டதுதான் உண்மைக் காரணம் என்று தகவல் பரவியுள்ளது.
அமைச்சர் மீது அதிருப்தி
டாஸ்மாக் தொ.மு.ச., நிர்வாகிகள் சிலரிடம் பேசியபோது, 'குறைந்தபட்ச சம்பளம் 18 ஆயிரம் ரூபாய், பணி நிரந்தரம், வங்கிகளே கடைக்கு வந்து பணத்தை வசூலிக்கும் நடைமுறை, கடைகளில் கழிப்பிட வசதி என நாங்கள் கேட்பவை நியாயமான கோரிக்கைகள். அவற்றோடு பணி மாறுதல் பட்டியல் தந்ததும் உண்மைதான். கடந்த பத்தாண்டுகளாக, அ.தி.மு.க.,வினர்தான் நல்ல வருவாயுள்ள கடைகளில் உட்கார்ந்துள்ளனர்.
தி.மு.க.,வினர் கிராமங்களில் வருவாய் இல்லாத கடைகளில், எங்கெங்கோ துாக்கி அடிக்கப்பட்டிருந்தனர். இப்போது ஆட்சிக்கு வந்துள்ளதால், நல்ல கடைகளை நம் கட்சிக்காரர்களுக்குக் கொடுங்கள் என்று கேட்கிறோம். அதைச் செய்ய மறுக்கிறார் அமைச்சர்' என்றனர்.அ.தி.மு.க.,வினருடன் உள்ள பழைய உறவு காரணமாக, அவர்களை மாற்ற அமைச்சர் செந்தில் பாலாஜி மறுப்பதாகவும் அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
அதிகாரி சமாதான பேச்சு
இதற்கிடையில், 25 அம்ச கோரிக்கைகளில் சிலவற்றை நிறைவேற்றுவதாகவும், மற்றவை அரசின் கொள்கை முடிவுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் கூறி, போராட்டத்தைக் கைவிடுமாறு, டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் சுப்பிரமணியம், தி.மு.க., தொழிற்சங்க நிர்வாகிகளுக்குக் கடிதம் எழுதியுள்ளார். நிர்வாகிகளை அழைத்தும் பேசியும் உள்ளார்.
போராட்டம் நடந்தால், அரசுக்கு எதிராக ஆளும்கட்சி தொழிற்சங்கமே போராட்டம் நடத்திய அரசியல் அதிசயம் தமிழகத்தில் முதல் முறையாக அரங்கேறும். அதுவே தி.மு.க., அரசுக்கு எதிராக கடும் விமர்சனத்தை ஏற்படுத்தும் என்பது நிச்சயம்.