சேலம்: சேலம் மாநகராட்சி பகுதியில், சீர்மிகு நகர திட்டத்தில் நடந்து வரும் பணி குறித்த ஆய்வு கூட்டம், கமிஷனர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. அதில், மாநகராட்சி கமிஷனர் கிறிஸ்துராஜ் பேசியதாவது: சீர்மிகு நகர திட்டத்தில், 81 பணிகள் எடுக்கப்பட்டு, இதுவரை, 45 பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. மீதி, 36 பணிகள் செயல்பாட்டில் உள்ளது. புது பஸ் ஸ்டாண்ட் அருகே, அடுக்குமாடி வாகன நிறுத்துமிடம், தம்மண்ணன் சாலை, சத்திரம் சாலை, ஆனந்தா பாலம் அருகே அடுக்குமாடி வாகன நிறுத்துமிடம், பெரியார் பேரங்காடி அபிவிருத்தி பணி, பள்ளப்பட்டி ஏரி அபிவிருத்தி செய்து அழகுபடுத்தும் பணி, மார்க்கெட் மேம்பாடு, எருமாபாளையம் பசுமைவெளி பூங்கா, சாலைகள் சீரமைக்கும் பணி, ஓடைகள் பலப்படுத்தும் பணி, குமரகிரி ஏரி சீரமைத்தல், நிலுவையில் உள்ள பாதாள சாக்கடை திட்டப்பணி உள்ளிட்டவை நடந்து வருகிறது. இப்பணிகளை குறிப்பிட்ட காலத்துக்குள் முடித்து, மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் எனவும், சீர்மிகு திட்டபணிகளை விரைந்து முடிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார். சேலம் எம்.பி., பார்த்திபன், எம்.எல்.ஏ.,க்கள் வடக்கு தொகுதி ராஜேந்திரன், தெற்கு தொகுதி பாலசுப்ரமணியம், மேற்கு தொகுதி அருள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.