தொப்பூர்: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரிலிருந்து, டைல்ஸ் பாரம் ஏற்றிய கன்டெய்னர் லாரி தூத்துக்குடிக்கு சென்றது. லாரியை, தூத்துக்குடி டவுனை சேர்ந்த ராமர், 35, ஓட்டினார். தர்மபுரி மாவட்டம் தொப்பூர் கணவாய் பகுதியில், நேற்று காலை லாரி சென்றபோது, டிரைவரின் கட்டுபாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. அப்போது லாரியில் இருந்த கன்டெய்னர் தனியாக கழன்று சாலையில் விழுந்த நிலையில், லாரி மட்டும் தனியாக ஓடி, சாலை நடுவே இருந்த தடுப்பு சுவற்றை தாண்டி மலை மீது லாரி மோதியது. இதில், டிரைவர் ராமர் தலையில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே பலியானார். விபத்தால், சேலம் - தர்மபுரி சாலையில், சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்து குறித்து, தொப்பூர் போலீசார் விசாரிக்கின்றனர்.