நாமக்கல்: நடுக்கோம்பை கிராம ஊராட்சி தலைவர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். சேந்தமங்கலம் ஒன்றியம், நடுக்கோம்பை கிராம ஊராட்சி தலைவராக பணியாற்றி வந்த அழகப்பன், சில மாதங்களுக்கு முன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். அதையடுத்து, தற்போது அங்கு ஊராட்சி தலைவர் பதவிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டிருந்தது. அதில், இறந்துபோன பஞ்., தலைவர் மகனும், தி.மு.க., உறுப்பினரான விஜயபிரகாஷ் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார். மேலும், அதே பகுதியைச் சேர்ந்த முருகேசன், சின்னப்பையன், செல்லாகவுண்டர், அருண் ஆகியோரும் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர். வேட்புமனு பரிசீலனையில் தேவையான ஆவணங்கள் இணைக்கப்படாததால், முருகேசன், சின்னப்பையன், செல்லாகவுண்டர் ஆகியோரது மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. வேட்பு மனுவை அருண் வாபஸ் பெற்றுக்கொண்டார். அதையடுத்து ஊராட்சி தலைவராக விஜயபிரகாஷ் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு, சேந்தமங்கலம் எம்.எல்.ஏ., பொன்னுசாமி, ஒன்றிய செயலாளர் அசோக்குமார், நகர செயலாளர் தனபால் உள்ளிட்டோர் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.