நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில், கடந்த, 12, 19ல் மாபெரும் தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டதில், 85 ஆயிரத்து, 325 மற்றும் 31 ஆயிரத்து, 448 பேர் தடுப்பூசி செலுத்தி பயன்பெற்றனர். மூன்றாம் கட்டமாக, இன்று அனைத்து ஊராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் நகராட்சிகள் ஆகிய பகுதிகளில் உள்ள அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள். துணை சுகாதார நிலையங்கள், ஊட்டச்சத்து மையங்கள் மற்றும் அரசு தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் உள்ள, 476 நிலையான முகாம்கள் மூலமாகவும், 24 நடமாடும் குழுக்கள் மூலமாகவும் என, மொத்தம், 500 முகாம்களில், காலை, 7:00 முதல், இரவு, 7:00 மணி வரை கொரோனா நோய் மெகா தடுப்பூசி முகாம் நடக்கிறது. இம்முகாம் பணிகளில், 210 மருத்துவர்கள், 430 செவிலியர்கள், 1,600 அங்கன்வாடி பணியாளர்கள், 1,400 ஆசிரியர்கள், 415 பயிற்சி செவிலியர்கள், 265 பயிற்சி சுகாதார ஆய்வாளர்கள் ஈடுபடுத்தப்பட்டு, 55 ஆயிரம் பேருக்கு தடுப்பூசிகள் செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பணியாளர்கள், தொழிலாளர்கள், தொழில் முனைவோர், விவசாயிகள், காய்கறி வியாபாரம் செய்பவர்கள், வர்த்தக நிறுவனங்களை சார்ந்தவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தி, தங்கள் நண்பர்கள், உறவினர்கள் அனைவரும், தடுப்பூசி போட்டுகொள்வதை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு, கலெக்டர் ஸ்ரேயா சிங் தெரிவித்துள்ளார்.