சேலம்: பெண் இன்ஸ்பெக்டரை, பா.ம.க.,-எம்.எல்.ஏ., மிரட்டுவதாக குறிப்பிட்டு, ஆடியோ பரவி வருவதால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
சேலம், இரும்பாலை போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரகலா. இவரை, சேலம் மேற்கு தொகுதி பா.ம.க.,-எம்.எல்.ஏ., அருள் மிரட்டியதாக, சமூக வலைதளங்களில் ஆடியோ உலா வருகிறது. அதில், இன்ஸ்பெக்டரை ஒருமையில் பேசி பல இடங்களில், 50 ஆயிரம், ஒரு லட்சம் ரூபாய் என கையூட்டு பெற்று பணி செய்து வருவதாக குற்றம்சாட்டியுள்ளார். அத்துடன், எம்.எல்.ஏ.,வான நான், உங்கள் மீது கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வருவதாகவும் கறியுள்ளார்.இதுகுறித்து, போலீஸ் தரப்பில் கூறியதாவது: வயதான தம்பதியரின் நிலத்தை எழுதி வாங்குவதாக வந்த புகாரில் விசாரித்தபோது, நில உரிமையாளருக்கு சம்மதம் இல்லாத நிலையில், பா.ம.க.,வினர் சிலர், நிலத்தை எழுதி கொடுக்க வற்புறுத்தியது தெரிந்தது. இதனால், பா.ம.க.,வினரை, இன்ஸ்பெக்டர் எச்சரித்து அனுப்பியுள்ளார். அவர்களின் தூண்டுதல்படி எம்.எல்.ஏ., பெண் இன்ஸ்பெக்டரை மிரட்டியுள்ளார். இவ்வாறு அவர்கள் கூறினர். எம்.எல்.ஏ., அருள் கூறுகையில், ''இன்ஸ்பெக்டர் சந்திரகலா, மக்களிடம் எதற்கெடுத்தாலும் லஞ்சம் வாங்குவதாக பலரும் புகார் தெரிவித்தனர். அதனால் லஞ்சம் வாங்காமல் பணிபுரிய கூறினேன். ஆடியோ வெளியிட்டதில் வருத்தமில்லை. அவர், லஞ்சம் வாங்குவதை நிறுத்த வேண்டும். இல்லாவிட்டால், ஸ்டேஷன் முன் ஆர்ப்பாட்டம் நடத்துவோம்,'' என்றார்.