மதிப்பு கூட்டிய ஜவுளி உற்பத்திக்கு ஆர்வம்: கூட்டமைப்பு சர்வேயில் தகவல் | கோயம்புத்தூர் செய்திகள் | Dinamalar
மதிப்பு கூட்டிய ஜவுளி உற்பத்திக்கு ஆர்வம்: கூட்டமைப்பு சர்வேயில் தகவல்
Advertisement
 

பதிவு செய்த நாள்

28 செப்
2021
08:56

கோவை;மதிப்பு கூட்டிய ஜவுளி உற்பத்தியில் புதிய முதலீடுகளை செய்வதற்கு, தமிழக ஜவுளித்தொழில் நிறுவனங்கள் ஆர்வமாக இருப்பது, சர்வேயில் தெரியவந்துள்ளது.கொரோனாவுக்கு பின், ஏற்றுமதி வர்த்தகத்தில் ஏற்பட்டுள்ள சாதகமான சூழலை, தமிழக ஜவுளித் துறை எவ்வாறு எதிர்நோக்குகிறது என்பதை அறிய, இந்திய ஜவுளித்தொழில் முனைவோர் கூட்டமைப்பு (ஐ.டி.எப்.,) சார்பில், சர்வே நடத்தப்பட்டது.



நுாற்பாலைகள், ஒட்டுமொத்த கட்டமைப்பை வைத்துள்ள நிறுவனங்கள், ஆயத்த ஆடை நிறுவனங்கள், வீவிங், சாய ஆலைகள், ஹோம் டெக்ஸ்டைல்ஸ் துறையைச் சார்ந்த, 257 நிறுவனத்தினர், சர்வேயில் கருத்து தெரிவித்தனர்.'தற்போதைய ஆண்டு வர்த்தகத்தை, எத்தனை ஆண்டுகளில் இரட்டிப்பாக்க திட்டம்' என்ற கேள்விக்கு, 30 சதவீதம் பேர், 3 ஆண்டு என்றும், 18 சதவீதம் பேர், 4 ஆண்டு என்றும், 26 சதவீதம் பேர், 5 ஆண்டு என்றும் தெரிவித்துள்ளனர். இளம் தலைமுறையினர், ஜவுளி உற்பத்தி துறையில் ஆர்வம் காட்டுகின்றனரா என்ற கேள்விக்கு, 58 சதவீதம் பேர் மிகுந்த ஆர்வம் காட்டுவதாகவும், 31 சதவீதம் பேர் குறைவான ஆர்வம் காட்டுவதாகவும் தெரிவித்துள்ளனர்.



பங்குசந்தைகளில் நிறுவனத்தின் பங்குகளை பட்டியலிட திட்டம் உள்ளதா என்ற கேள்விக்கு, 16 சதவீதம் பேர் ஆர்வமாக உள்ளதாக தெரிவித்துள்ளனர்.சர்வே குறித்து ஐ.டி.எப்., அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பிரபு தாமோதரன் கூறியதாவது:ஜவுளி உற்பத்தி சங்கிலித் தொடரில் உள்ள பல்வேறு துறைகளில், ஹோம் டெக்ஸ்டைல்ஸ் துறை, ஆயத்த ஆடை, வீவிங் துறைகளில் அதிக முதலீட்டு ஆர்வம் இருப்பது, சர்வேயில் தெரிய வந்துள்ளது. மதிப்புக் கூட்டப்பட்ட ஜவுளி பொருட்கள் தயாரிப்பில், தமிழகம் முன்னணி பெறுவதற்கு இந்த முதலீடுகள் உதவிகரமாக இருக்கும்.


சீனாவிலிருந்து இந்திய ஜவுளித்துறைக்கு நகரும் ஏற்றுமதி வியாபார வாய்ப்புகள், மத்திய அரசின் முக்கிய அடிப்படை சீர்திருத்தங்கள், தமிழக அரசின் சீரிய தொழில்துறை வளர்ச்சிக்கான திட்டங்கள், வங்கிகளில் குறைந்த வட்டியில், தாராளமாக புது முதலீடுகள் செய்ய கடன் கிடைப்பது, தமிழகத்தின் பலமான ஜவுளி உற்பத்தித் துறை கட்டமைப்பு உலக அளவில் கவனம் பெற ஆரம்பிப்பது போன்ற காரணங்களால், முதலீட்டு ஆர்வம் அதிகரித்துள்ளது.


சர்வேயில் பங்கேற்ற நிறுவனங்களில், 76 சதவீதம் பேர், புது முதலீடுகளை மேற்கொண்டு, 3 முதல், 5 ஆண்டுக்குள் வியாபாரத்தை இரட்டிப்பாக்க முயற்சி மேற்கொண்டுள்ளனர். இது, தமிழக தமிழக ஜவுளித் துறையில் ஒரு புத்துணர்ச்சி ஏற்பட்டுள்ளதை காட்டுகிறது.



இந்திய பங்குச்சந்தையின், மொத்த மதிப்பு, 240 லட்சம் கோடியாக இருக்கும் இன்றைய நிலையில், பட்டியலிடப்பட்ட ஜவுளி நிறுவனங்களின் பங்குச் சந்தை மதிப்பு வெறும், 2 லட்சம் கோடியாக மட்டுமே உள்ளது. தமிழக ஜவுளி உற்பத்தி நிறுவனங்கள், பங்குச் சந்தைகளில் பட்டியலிட முயற்சி எடுக்க முன்வந்திருப்பது நல்ல அறிகுறியாகும். ஆர்வமுள்ள நிறுவனங்களின் பங்குச் சந்தை முயற்சிக்கு உதவ, ஐ.டி.எப்., அமைப்பு சார்பில் நிபுணர் குழு அமைக்கப்பட உள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.சர்வேயில் பங்கேற்ற 257 நிறுவனங்களின் ஒட்டுமொத்த ஆண்டு வியாபார மதிப்பு, 36 ஆயிரம் கோடி ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X