மதுரை : மதுரை மாநகராட்சி பகுதியில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள கடைகள், ஆக்கிரமிப்புகளை ஒரு வாரத்தில் அகற்ற கமிஷனர் கார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார். அதேபோல் பைபாஸ் ரோடு வாரச்சந்தையை போக்குவரத்திற்கு இடையூறு இல்லாத, மக்களுக்கு பாதிப்பில்லாத இடத்திற்கு மாற்றுவது குறித்து கமிஷனர் இன்று (அக்.,8) நேரில் ஆய்வு செய்ய வேண்டும்.
மதுரையில் பார்க்கும் இடங்களில் எல்லாம் கடைகளை விரித்து ஆக்கிரமிப்பு செய்வது தொடர்கிறது. பைபாஸ் ரோடு, எல்லீஸ்நகர், அரசு மருத்துவமனை பகுதி, அண்ணாநகர் உட்பட பல பகுதிகளில் ஆக்கிரமிப்பு கடைகளின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது. தினமலர் நாளிதழ் தொடர்ந்து சுட்டிக்காட்டியதன் எதிரொலியாக மாநகராட்சி நடவடிக்கை எடுக்க முன்வந்துள்ளது.
கமிஷனர் கார்த்திகேயன் கூறியதாவது: மாநகராட்சிக்குசொந்தமான பராமரிப்பு பகுதிகளில் அனுமதியின்றி, ஆக்கிரமித்த, காலாவதியாகியும் வைக்கப்பட்டுள்ள பெட்டிக்கடைகள், நிரந்தர, தற்காலிக கட்டுமானங்களை ஒரு வாரத்தில் சம்பந்தப்பட்டப்பவர்கள் அகற்ற வேண்டும்.
குறிப்பாக சின்னக்கடை தெரு, அவனியாபுரம் பஸ் ஸ்டாண்ட், செம்பூரணி வரை மற்றும் கீழமாரட் வீதி, அரசு மருத்துவமனை முன்புறம், சுகுணா ஸ்டோர் ரோடு ஆகிய இடங்களில் உள்ளஆக்கிரமிப்புக்களால் மக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறு ஏற்படுவதாக போலீசார் தெரிவித்துள்ளனர். எனவே தற்காலிக கட்டுமானங்கள், பெட்டி கடைகள்,இந்த அறிவிப்பு வெளியிடப்பட்ட ஒரு வாரத்திற்குள் அகற்றாவிடில் மாநகராட்சி மூலம்அகற்றிஅபராதம் வசூலிக்கப்படும் என்றார்.
இதேபோல் பைபாஸ் ரோடு உள்ளிட்ட இடங்களில் ஆக்கிரமிப்பு கடைகளையும் அகற்ற மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும். போக்குவரத்திற்கும், மக்களுக்கும் இடையூறாக இன்று பைபாஸ் ரோடு சர்வீஸ் ரோட்டில் செயல்பட உள்ள வார காய்கறி சந்தையை, இடையூறு இல்லாத வேறு பகுதிக்கு மாற்ற வேண்டும். கமிஷனர் கார்த்திகேயன் நேரில்வந்து ஆய்வு செய்தால் அதன் உண்மை நிலை தெரியவரும்.