கூடலூரில் ஆட்கொல்லி புலி சிக்கியது: 21 நாள் தேடுதலுக்கு பின் 'சிறை' | நீலகிரி செய்திகள் | Dinamalar
கூடலூரில் ஆட்கொல்லி புலி சிக்கியது: 21 நாள் தேடுதலுக்கு பின் 'சிறை'
Advertisement
 

பதிவு செய்த நாள்

16 அக்
2021
05:37

கூடலுார்;கூடலுாரில் கடந்த, 21 நாட்களாக தேடப்பட்டு வந்த புலி, நேற்று மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது.நீலகிரி மாவட்டம், கூடலுாரில் நான்கு பேரை தாக்கி கொன்ற புலியை, செப்., 25 முதல் மயக்க ஊசி செலுத்தி பிடிக்கும் பணியில், வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.நேற்று முன்தினம், இரவு, 9:30 மணிக்கு தெப்பக்காடு-- மசினகுடி சாலை அருகே சென்ற புலி குறித்த தகவலை தொடர்ந்து, வனத்துறை மருத்துவ குழுவினர் மயக்க ஊசி செலுத்தினர். நீண்ட நேர தேடுதலுக்கு பின், புலி முட்புதரில் இருப்பதை அறிந்து பிடிக்க முயன்றனர். ஆனால், மயக்கம் தெளிந்த புலி தப்பியது.நேற்று காலை, 9:30 மசினகுடி வனச்சோதனை சாவடி அருகே, தெப்பக்காடு சாலையில் சென்ற புலியை வன ஊழியர்கள் பார்த்துள்ளனர். சாலையில் வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டது. போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.கூட்டுபாறை வனப்பகுதியில், மதியம், 2:30 மணிக்கு, புலி மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது. மயக்கமடைந்த புலியின் வாயில் துணியால் கட்டி, இரும்பு கூண்டில் படுக்கவைக்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டது.வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், வனத்துறை செயலர் சுப்ரியா சாஹூ மற்றும் உயர் அதிகாரிகள் அங்கு சென்று, புலியின் நிலை குறித்து ஆய்வு செய்தனர்.மைசூருவில் சிகிச்சைமுதன்மை தலைமை வன பாதுகாவலர் சேகர் குமார் நீரஜ் கூறுகையில்,''மயக்க ஊசி செலுத்தப்பட்ட புலி சோர்வாக உள்ளது. அதற்கு சிகிச்சை அளிக்க வேண்டி உள்ளதால், மைசூரு மிருக காட்சி சாலைக்கு கொண்டு செல்லப்படும். அங்கு சிகிச்சை முடிந்தவுன் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்யப்படும்,'' என்றார்.புலிபிடிக்கப்பட்டதால், கூடலுார், மசினகுடி மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். அப்பகுதிக்கு வந்து, அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்தனர்.டி-23 புலி தாக்கி இறந்தவர்கள் 2020 ஆக., 31ல் மசினகுடி அருகே பழங்குடி இனத்தை சேர்ந்த கவுரி,50. 2021 ஜூலை, 19ல் முதுமலை முதுகுழியை சேர்ந்த குஞ்சிகிருஷ்ணன், 49. செப்., 24ல், கூடலுார் தேவர்சோலை அருகே, தனியார் எஸ்டேட் தொழிலாளி சந்திரன், 51. அக., 1ல் மசினகுடி குரும்பர் பாடியை சேர்ந்த, மங்களபசுவன்,85.வனத்துறைக்கு 'சபாஷ்' வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் கூறுகையில்,'' கடந்த காலங்களில், நீலகிரியில் மனிதரை கொன்ற ஆட்கொல்லி புலிகள் அதிரடிப்படையால் சுட்டு கொல்லப்பட்டன. ஆனால், தற்போது நான்கு பேரை கொன்ற புலியை வனத்துறையினர் மிகவும் திறமையுடன் தேடி, மயக்க ஊசி செலுத்தி பிடித்துள்ளனர். இதற்கு அரசு சார்பில் பாராட்டு தெரிவித்து கொள்கிறேன். புலிக்கு காயங்கள் உள்ளதால், அதற்கான சிகிச்சை அளிக்க வேண்டி உள்ளது,'' என்றார்.

 

Advertisement
மேலும் நீலகிரி மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X