டேங்க் ஆபரேட்டர் கொலை வழக்கில் 5 பேர் சிக்கினர்: உறவினர்கள் மறியல் | செய்திகள் | Dinamalar
டேங்க் ஆபரேட்டர் கொலை வழக்கில் 5 பேர் சிக்கினர்: உறவினர்கள் மறியல்
Advertisement
 

பதிவு செய்த நாள்

16 அக்
2021
05:54

புதுச்சேரி : டேங்க் ஆபரேட்டர் கொலை வழக்கில், முன்னாள் கவுன்சிலர் மாந்தோப்பு சுந்தர் மனைவி, மகன் உட்பட எட்டு பேர் மீது வழக்கு பதிந்து, 5 பேரை பிடித்து போலீசார் விசாரிக்கின்றனர்.



புதுச்சேரி, கோரிமேடு, காமராஜர் நகர், கட்டபொம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் மணிவண்ணன், 53; டேங்க் ஆபரேட்டர். இவர் நேற்று முன்தினம் புதுச்சேரி அடுத்த தமிழக பகுதி, திருநகரில் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். ஆரோவில் போலீசார் விசாரித்தனர்.அதில், மேட்டுப்பாளையம் போக்குவரத்து முனையத்தில் கடந்த ஆண்டு நடந்த முன்னாள் கவுன்சிலர் மாந்தோப்பு சுந்தர் கொலை வழக்கில், மணிவண்ணன் மகன்கள் வினோத், சுந்தர் சம்பந்தப்பட்டு இருப்பதும், அதற்கு பழிக்கு பழியாக படுகொலை செய்யப்பட்டதும் தெரிய வந்தது.



இதில் மாந்தோப்பு சுந்தர் மனைவி செல்வி, அவரது மகன் ஜோஸ்சுவா, அதே பகுதியைச் சேர்ந்த வெற்றிவேல் மகன் மது, லட்சுமணன் மகன் பாஸ்கர், மணி மகன் ஆனந்தராஜ், பூபாலன் மகன் சரண், நகர்சிங் மகன் புத்தர், வெட்டு முருகன் ஆகியோர் கொண்ட கும்பல் சதி திட்டம் தீட்டி, கொலை செய்தது தெரிய வந்தது.அவர்கள் மீது கொலை உள்ளிட்ட ஐந்து பிரிவுகளில் ஆரோவில் போலீசார் வழக்கு பதிந்து, மூன்று தனிப்படை அமைத்து, குற்றவாளிகளை தேடி வந்தனர்.



சாலை மறியல்



குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி அவரது ஆதரவாளர்கள், உறவினர்கள் திண்டிவனம் - புதுச்சேரி நெடுஞ்சாலை மொரட்டாண்டியில் நேற்று மதியம் 1.30 மணியளவில் மறியலில் ஈடுபட்டனர்.ஆரோவில் போலீசார் பேச்சு வார்த்தை நடத்தினர். அதன் பேரில், 1:50 மணியளவில் மறியலை கைவிட்டனர்.



ஐந்து பேர் சிக்கினர்



சப் இன்ஸ்பெக்டர் பிரபு தலைமையிலான தனிப்படையிடம் மாந்தோப்பு சுந்தர் மனைவி செல்வி உள்பட 5 பேர் சிக்கியுள்ளனர். அவர்களை ரகசிய இடத்தில் வைத்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.



இதற்கிடையில் விழுப்புரம் எஸ்.பி., ஸ்ரீநாதா நேரில் விசாரணை நடத்தினார். இரு மாநில எல்லை நிலவரம் குறித்து கேட்டறிந்தார்.மணிவண்ணன் கொலை சம்பவத்தால், எல்லையில் பதட்டம் நீடிக்கிறது. இதனால் இருமாநில போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X