சென்னை:'நவம்பர், 1ம் தேதி முதல் பள்ளிகளை திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது' என ஆறாம் வகுப்பு மாணவியிடம், முதல்வர் ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார்.கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் டைட்டன் டவுன்ஷிப் பகுதியைச் சேர்ந்த ரவிராஜன் என்பவர் மகள் பிரஜ்னா. இவர் அங்குள்ள பள்ளியில், 6ம் வகுப்பு படித்து வருகிறார்.கொரோனா ஊரடங்கால் மூடப்பட்டுள்ள பள்ளிகளை திறக்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலினுக்கு, மாணவி பிரஜ்னா கடிதம் எழுதி இருந்தார். அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டு இருந்த தொலைபேசி எண்ணிற்கு, முதல்வர் நேற்று தொடர்பு கொண்டு பேசியதாவது: நவ., 1 முதல் பள்ளிகளை திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அவ்வாறு பள்ளிகளை திறக்கும் போது, பிரஜ்னா பள்ளிக்கு கவலையின்றி செல்லலாம்.பள்ளிக்கு செல்லும் போது ஆசிரியர்கள் சொல்வதை கேட்டு, தனிமனித இடைவெளியை பின்பற்ற வேண்டும்.முக கவசம் அணிய வேண்டும். கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை முறையாக பின்பற்ற வேண்டும்; நன்றாக படிக்க வேண்டும்.இவ்வாறு மாணவியிடம் பேசி, ஸ்டாலின் அறிவுரை வழங்கி உள்ளார்.