தசைநார் சிதைவு நோயால் தவிக்கும் 9 மாத குழந்தை | கிருஷ்ணகிரி செய்திகள் | Dinamalar
தசைநார் சிதைவு நோயால் தவிக்கும் 9 மாத குழந்தை
Advertisement
 

பதிவு செய்த நாள்

16 அக்
2021
10:24

கிருஷ்ணகிரி: தசைநார் சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட, ஒன்பது மாத குழந்தையை காப்பாற்ற, பெற்றோர் போராடி வருகின்றனர்.


கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணத்தை சேர்ந்தவர் ஜெகன்நாதன், 30, குடிசை தொழில் செய்து வருகிறார். மனைவி பிரியதர்ஷணி. இவர்களுக்கு, ஒன்பது மாதத்தில் பெண் குழந்தை உள்ளது. ஐந்து மாதங்களுக்கு பின் குழந்தையின் கை, கால்கள் அசைவு இல்லாமலும், தலை நிற்காமலும் இருந்துள்ளது. பெங்களூரு தனியார் மருத்துவமனையில் நடத்திய பரிசோதனையில் கடந்த, ஆக.,12ல், குழந்தைக்கு மரபணு பாதிப்பினால் ஏற்படும் எஸ்.எம்.ஏ., -டைப் 1 என்ற தசைநார் சிதைவு நோய் இருப்பது தெரிந்தது. இது, 10 ஆயிரம் குழந்தைகளில் ஒரு குழந்தைக்கு ஏற்படும் அரிய நோயாகும். அமெரிக்காவில் தயாராகும் இந்த மருந்தின் விலை, 16 கோடி ரூபாய். குழந்தைக்கு இரண்டு வயது ஆவதற்குள் ஊசி செலுத்தாவிடில், உயிருக்கு ஆபத்து ஏற்படும் என, டாக்டர்கள் கூறியுள்ளனர்.


இது குறித்து, குழந்தையின் பெற்றோர் கூறியதாவது: குழந்தை நிலைமை குறித்து மத்திய, மாநில அரசுகள் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சரை நேரில் சந்தித்து மனு அளித்தோம். பத்திரிகை, ஊடகங்களில் குழந்தை குறித்த செய்திக்குப்பின், மாவட்ட சுகாதாரத்துறையினர் தொடர்பு கொண்டு, குழந்தைக்கு பரிசோதனை செய்தனர். பின்சென்னைக்கு சென்று அதிகாரிகளிடம் மனு அளித்தோம். அரசுக்கு தகவல் தெரிவித்திருப்பதாகவும், பதில் வந்தவுடன் அழைக்கிறோம் என்றனர். இதுவரை யாரும் தொடர்பு கொள்ளவில்லை. எம்.எல்.ஏ.,க்கள், - எம்.பி., உட்பட யாரும் கண்டுகொள்ளவில்லை, சில சமூக ஆர்வலர்கள், தொண்டு நிறுவனங்கள் உதவி செய்து வருகின்றனர். குழந்தையை காப்பாற்ற அரசு உதவ வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர். உதவிக்கரம் நீட்ட விரும்புவோர், 90922 20459 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.


 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X