விழுப்புரம் : பெருங்கலாம்பூண்டி ஊராட்சித் தலைவர் பதவியை குலுக்கல் முறையில் தேர்வு செய்யக்கோரி விழுப்புரத்தில் கலெக்டர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு நிலவியது.
விக்கிரவாண்டி அடுத்த பெருங்கலாம்பூண்டி ஊராட்சி பொதுமக்கள், விழுப்புரம் கலெக்டர் பெருந்திட்ட வளாகம் நுழைவு வாயிலை நேற்று பிற்பகல் 2:30 மணியளவில் திடீரென முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.அங்கு, பாதுகாப்பு பணியிலிருந்த போலீசார், அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது ஊராட்சித் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட மாவீரன் மனைவி மகாலட்சுமி கூறியதாவது:மாற்றுத்திறனாளியான நான், பெருங்கலாம்பூண்டி ஊராட்சித் தலைவர் பதவிக்கு போட்டியிட்டேன். என்னை எதிர்த்து சூரியகாந்தி என்பவர் போட்டியிட்டார். இதில், நானும், சூரியகாந்தியும் தலா 245 ஓட்டுகள் சரிசமமாக பெற்றோம்.இதனால் மறுஓட்டு எண்ணிக்கை நடத்த வேண்டும் அல்லது குலுக்கல் முறையில் வேட்பாளரை தேர்வு செய்து முடிவு அறிவிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தேன்.
ஆனால், இதனை பரிசீலனை செய்யாமல் சூரியகாந்தி வென்றதாக அறிவித்தனர்.பெருங்கலாம்பூண்டி ஊராட்சித் தேர்தல் முடிவை நிறுத்தி வைத்து, சமமான ஓட்டுகள் பெற்ற மாற்றுத்திறனாளியான எனக்கு நீதி கிடைத்திட வேண்டும். மறுஓட்டு எண்ணிக்கைக்கு உத்தரவிட வேண்டும். அல்லது குலுக்கல் முறையை பின்பற்றி வேட்பாளரை தேர்வு செய்ய வேண்டும் என்றார்.இது குறித்து கலெக்டரின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக போலீசார் தெரிவித்தனர். அதனையேற்று அனைவரும் 3:00 மணியளவில் கலைந்து சென்றனர்.