தனித்து போட்டியிட்டு தோல்வி விரக்தியில் தே.மு.தி.க.,வினர் | கள்ளக்குறிச்சி செய்திகள் | Dinamalar
தனித்து போட்டியிட்டு தோல்வி விரக்தியில் தே.மு.தி.க.,வினர்
Advertisement
 

பதிவு செய்த நாள்

18 அக்
2021
06:31

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் தனித்து போட்டியிட்டு செலவு செய்த தே.மு.தி.க.,வினர் தோல்வி அடைந்ததால் விரக்தியடைந்தள்ளனர்.



கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள 9 ஒன்றியங்களில் 3,773 ஊரக உள்ளாட்சி பதவியிடங்களுக்கு தேர்தல் நடந்து முடிந்தது. இதில், அரசியல் அமைப்பு சார்ந்த பதவிகளான 19 மாவட்ட கவுன்சிலர், 180 ஒன்றிய கவுன்சிலர் பதவியிடங்களை கைப்பற்ற தி.மு.க., - அ.தி.மு.க., - பா.ம.க., - தே.மு.தி.க., உட்பட பல்வேறு கட்சி வேட்பாளர்கள் தீவிர ஆர்வம் செலுத்தினர். மாவட்டத்தில் 19 வார்டு மாவட்ட கவுன்சிலர் பதவியிடங்களில், 5 மற்றும் 13 வார்டில் தி.மு.க., சார்பில் போட்டியிட்டவர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப் பட்டனர்.



மீதமுள்ள 17 இடங்களில் தே.மு.தி.க., - 12, பா.ம.க., -9, பா.ஜ., -8, நாம் தமிழர் கட்சி -15, அ.ம.மு.க.,-10, ம.நீ.ம., -1, த.மா.கா., -1, பகுஜன் சமாஜ் -2, இடங்களில் போட்டியிட்டன. ஆனால், அனைத்து மாவட்ட கவுன்சிலர் பதவியிடங்களையும் தி.மு.க., கைப்பற்றியது.அதேபோல், மாவட்டத்தில் உள்ள 180 ஒன்றிய கவுன்சிலர் பதவியிடங்களில், கள்ளக்குறிச்சி ஒன்றியத்தில் 11வது வார்டு, தியாகதுருகம் ஒன்றியத்தில் 4 மற்றும் 13வது வார்டு என மொத்தம் 3 இடங்களில் தி.மு.க., சார்பில் போட்டியிட்டவர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.



மீதமுள்ள 177 பதவியிடத்திற்கு தே.மு.தி.க, -69, பா.ம.க., -48, பா.ஜ., -33, நாம் தமிழர் 82, காங்., -2, ம.தி.மு.க., -2, அ.ம.மு.க.,-22, பகுஜன் சமாஜ்-3 இடங்களில் போட்டியிட்டன. இதில் பா.ம.க., ஒரு இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றது. பா.ஜ., -தே.மு.தி.க., -நாம் தமிழர் கட்சி ஒரு இடங்களில் கூட வெற்றி பெறவில்லை.கடந்த சட்டசபை தேர்தல் கூட்டணி உள்ளாட்சி தேர்தலிலும் நீடித்திருந்தால், அ.தி.மு.க., - பா.ம.க., வேட்பாளர்கள் கூடுதலாக சில இடங்களிலும், பா.ஜ., ஒரு சில இடங்களிலும் வெற்றி பெற்றிருக்கும்.



அதேபோல், சட்டசபை தேர்தலில் 4 தொகுதிகளிலும் அதிகளவிலான ஓட்டுகளைப் பெற்று மூன்றாவது இடத்தில் இருந்த நாம் தமிழர் கட்சி, உள்ளாட்சித் தேர்தலில் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை.தனித்து போட்டி என்ற தே.மு.தி.க., தலைமையின் முடிவால், ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. எப்படியும் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையில் செலவு செய்து பொருளாதாரத்தை இழந்த அக்கட்சியினர் விரக்தியில் உள்ளனர்.

 

Advertisement
மேலும் கள்ளக்குறிச்சி மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X