சிவகாசி : கோயில்களில் வழக்கமான நேரங்களில் நடை திறக்க , சுவாமி கும்பிட தமிழக அரசு அனுமதி வழங்கியும், சிவகாசி சிவன் கோயிலில் அதிகாரிகளின் அசட்டையால் நடைமுறைகள் பின்பற்றப்படாமல் தாமதமாக திறக்கப்படுவதால் பக்தர்கள் அவதிப்படுகின்றனர்.
சிவகாசியில் ஹிந்து அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் சிவன் கோயில் உள்ளது.கொரோனா தொற்றினால் வெள்ளி, சனி, ஞாயிறு அன்று கோயில்கள் திறக்கப்படாத நிலையில், தற்போது அனைத்து நாட்களிலும் வழக்கமான நேரங்களில் நடை திறக்க அரசு உத்தரவிட்டுள்ளது . ஆனால் இதை சிவகாசி சிவன் கோயிலில் கடைப்பிடிக்கவில்லை. வழக்கமாக காலை 5:45 மணிக்கு நடை திறக்கப்பட்டு மதியம் 12:00மணி, மாலை 4:00 மணிக்கு திறக்கப்பட்டு இரவு 9:00 மணிக்கு மூடப்படும்.
ஆனால் தற்போது வழக்கமான நேரத்தில் நடை திறப்பதில்லை. காலை 5:45 மணிக்கு திறக்க வேண்டிய நடை,நேற்று காலை 7:30 மணி வரை திறக்கவில்லை. இதே போல் மாலையும் தாமதமாகவே நடை திறக்கப்பட்டது. இங்கு உள்ள அதிகாரிகள் தங்கள் இஷ்டத்திற்கு செயல்படுவதாகவும், மன நிம்மதிக்காக சுவாமி கும்பிட வந்தும் நிம்மதியின்றி செல்ல வேண்டிய நிலை உள்ளதாக பக்தர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
மலர்விழி (பா.ஜ., மாவட்ட துணைத் தலைவர்: மற்ற கோயில்களில் எல்லாம் அரசு உத்தரவிட்ட பின்பு வழக்கமாக நடை திறக்கப்பட்டு பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. சிவகாசி சிவன் கோயிலில் மட்டும் பழைய விதிமுறைகளை பின்பற்றுகின்றனர். அங்குள்ளவர்களிடம் கேட்டால் அதிகாரிகள் எங்களுக்கு எந்தவித உத்தரவும் கொடுக்கவில்லை என்கின்றனர். அதிகாரிகளின் அலட்சியத்தால் பக்தர்கள் மன நிம்மதியின்றி செல்கின்றனர்,என்றார்.
ஆறுமுகச்சாமி (பா.ஜ., ஊடகப்பிரிவு செயலாளர்): காலை 5:45 மணிக்கு நடை திறக்கப்பட வேண்டிய கோயிலில் 7:30 மணி வரை திறக்கப்படவில்லை. இதனால் பக்தர்கள் வேறு வழியின்றி கோயில் முன்பாக வெளியில் நின்று சுவாமி கும்பிட்டனர். அதிகாரிகளும் அலட்சியத்தில் உள்ளனர்,என்றார்.
வெள்ளைச்சாமி ( சிவன் கோயில் செயல் அலுவலர்): கோயிலில் சுவாமிக்கு அலங்காரம் செய்வதாற்காக நடை அடைக்கப்பட்டிருந்தது. பின்னர் வழக்கம்போல பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. இதேபோல்தான் மாலையும் அலங்காரம் முடிந்த பின்னர் கோயிலுக்குள் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். இன்றிலிருந்து வழக்கமான நேரத்தில் கோயில் நடை திறக்கப்படும்,என்றார்.